கடன் முதலை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 24 வயது மலேசிய ஆடவர் இருவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
அவர்கள் இருவரும் மே 21ஆம் தேதி சம்பவ இடங்களுக்குக் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் ஒருவரான ஜீவந்தரன் ரூபன் குமார், புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 8, பூன் லே டிரைவ் உள்ளிட்ட இடங்களில் நடந்த கடன் முதலைத் தொல்லைச் சம்பவங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டார்.
பூன் லே டிரைவில் நடந்த சம்பவம் குறித்து மே 19ஆம் தேதி காலை 6.12 மணியளவில் தகவல் பெற்றதாகக் காவல்துறை கூறியது. வீட்டின் நுழைவாயிலிலும் கதவிலும் சிவப்புச் சாயம் வீசப்பட்டிருந்தது. கடன் முதலையின் குறிப்பு சுவரில் ஒட்டப்பட்டிருந்தது.
விசாரணைகள், காவல்துறை கண்காணிப்பு கேமராப் பதிவுகள் மூலம் ஒன்பது மணி நேரத்திற்குள் ஜூரோங் காவல்துறைப் பிரிவு, காவல்துறைச் செயலாக்க ஆணை நிலைய (Police Operations Command Centre) அதிகாரிகள் அவரை அடையாளங்கண்டு கைதுசெய்தனர்.
தீவு முழுவதும் கடன் முதலைத் தொல்லை தொடர்பான சம்பவங்களில் அவர் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கடன்கொடுப்போர் சட்டம் 2008ன்கீழ் (Moneylenders Act 2008) மே 21ஆம் தேதி அவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மற்றோர் ஆடவர் வின்சென்ட் ஓ ஜுன் லோங், ஈசூன் அவென்யூ 6ல் நடந்த கடன் முதலைத் தொல்லைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அச்சம்பவம் குறித்து மே 18ஆம் தேதி தகவல் பெற்றதாகக் காவல்துறை கூறியது. வீட்டின் நுழைவாயிலிலும் கதவிலும் சிவப்புச் சாயம் வீசப்பட்டிருந்தது. கடன் முதலையின் குறிப்பு சுவரில் ஒட்டப்பட்டிருந்தது.
நேரடி விசாரணை, காவல்துறை கண்காணிப்பு கேமராப் பதிவுகள்மூலம் உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவு அதிகாரிகள் அந்த ஆடவரை அடையாளங்கண்டனர். 12 மணி நேரத்திற்குள் அவரைக் கைதுசெய்தனர்.
தீவு முழுவதும் கடன் முதலைத் தொல்லை தொடர்பான குறைந்தது ஒன்பது சம்பவங்களில் அவர் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கடன்கொடுப்போர் சட்டம் 2008ன்கீழ், மே 19ஆம் தேதி அவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
முதன்முறை இத்தகைய குற்றம் செய்தோருக்கு $5,000 முதல் $50,000 வரையிலான அபராதமும், ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், அதிகபட்சம் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.