முதல்முறையாகப் போதைப்பொருள் உட்கொண்ட இரு இளையர்கள் மாண்டனர்.
இந்த வழக்குடன் தொடர்புடைய இளம் ஆடவரின் சடலம் அவரது படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்டது.
இளம் பெண் இன்னோர் அறையில் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அவர் சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அதே நாளில் அவர் மரணம் அடைந்தார்.
மாண்ட இளையர்களின் அடையாளத்தைக் காக்க அவர்களது பெயர்கள், வயது, வழக்குடன் தொடர்புடைய முகவரிகள் ஆகியவற்றை வெளியிடக்கூடாது என்று மரண விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதியன்று மருத்துவ உதவியாளர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்ததாக விசாரணை அதிகாரியான காவல்துறை ஆய்வாளர் ஃபர்ஹான், மரண விசாரணை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த மூன்று மாடி வீட்டை அடைந்தபோது இளம் ஆடவரின் சடலம் அவரது படுக்கையறையில் இருந்ததாகவும் அவரது தலையிலும் முகத்திலும் காயங்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அறையில் வெள்ளை நிறத் தூள், பச்சை நிற மாத்திரைகள், மின்சிகரெட் கருவிகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சம்பவ இடத்தில் இருந்த மூன்றாவது நபர் குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
மாண்டோர் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டது பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
அவர்களது மரணம் சந்தேகத்துக்குரியதல்ல என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இளம் ஆடவரின் உடலில் தென்பட்ட காயங்கள் ‘ஐஸ்’ வகை போதைப்பொருளை உட்கொண்டோருக்கு ஏற்படும் பக்க விளைவுகளே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்ட பெண்ணின் உடலில் போதைப்பொருள் இருந்தபோதும் உயிரைப் பறிக்கும் அளவுக்கு போதைப்பொருள் இருந்தது குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கவில்லை.
பெண்ணின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியவும் அதுகுறித்து கூடுதல் தகவல் பெறவும் காவல்துறை ஆய்வாளர் ஃபர்ஹானுக்கு மரண விசாரணை அதிகாரி ஆடம் நக்கோடா உத்தரவிட்டுள்ளார்.
இளையர்களின் மரணத்தைத் துயரச் சம்பவம் என அவர் வர்ணித்தார்.

