‘பவி’ சூறாவளி: 12 சிங்கப்பூர் விமானச் சேவைகள் ரத்து

‘பவி’ சூறாவளி: 12 சிங்கப்பூர் விமானச் சேவைகள் ரத்து

1 mins read
e2f6bba8-959d-45bd-9703-e441b49fee2d
ஷாங்காய் நகருக்கான விமானங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுத்தி வைத்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜப்பானின் பவி சூறாவளி காரணமாக சிங்கப்பூரிலிருந்து வடகிழக்கு ஆசியாவுக்கான பல விமானச் சேவைகள் சனி (ஜூலை 11) மற்றும் ஞாயிறு (ஜூலை 12) ஆகிய இரு நாள்களுக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூரிலிருந்து அந்த வட்டாரத்தின் பல்வேறு நகரங்களுக்குச் செல்லக்கூடிய குறைந்தபட்சம் 12 விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரிலிருந்து சனிக்கிழமை சீனாவின் ஷாங்காய் நகருக்குச் செல்லும் நான்கு விமானங்களை ரத்து செய்துள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதேபோல ஷாங்காயிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட வேண்டிய நான்கு விமானங்களை இரு நாள்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாகவும் அது தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து தைவான் மற்றும் ஷாங்காய் செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக சீனா ஏர்லைன்ஸ், இவா ஏர், ஸியாமென்ஏர், ஏர் சைனா விமான நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் சாங்கி விமான நிலையத்தின் இணையத்தளத்தில் ஆக அண்மையத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசியாவை ‘பவி’ சூறாவளி நெருங்கி வருவதால், தோக்கியோ, சப்போரோ, சோல், தைப்பே ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் குறைந்தது 18 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதாக இரு நாள்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது

‘பவி’ சூறாவளி தைவானின் வடக்குப் பகுதியைக் கடந்து, சனிக்கிழமை (ஜூலை 11) மாலை சீனாவின் புஜியான் மாநிலத்தின் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ஸ்கூட்சூறாவளி