கிழக்கு ஆசியாவை ‘பாவி’ சூறாவளி நெருங்கி வருவதால், தோக்கியோ, சப்போரோ, சோல், தைப்பே ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் குறைந்தது 18 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), ஸ்கூட் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதுகுறித்து இரு நிறுவனங்களும் வியாழக்கிழமை (ஜூலை 9) அறிக்கை வெளியிட்டுள்ளன.
சூறாவளி ‘பாவி’, தைவானின் வடக்கு பகுதியைக் கடந்து, சனிக்கிழமை (ஜூலை 11) மாலை சீனாவின் புஜியான் மாநிலத்தின் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஜூலை 11ஆம் தேதி சிங்கப்பூர் - தைப்பே இடையே இயக்கவிருந்த 4 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. வெள்ளிக்கிழமை (ஜூலை 10) இயக்கப்படும் இரு விமானச் சேவைகளின் நேரங்களை அது மாற்றியமைத்துள்ளது.
அதேபோல், தைப்பே வழியாக தோக்கியோ, சோல் நகரங்களுக்குச் செல்லவிருந்த 12 விமானங்களை ஸ்கூட் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
தங்களின் பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் அல்லது முழுத் தொகையும் திருப்பித் தரப்படும் என்று அவ்விரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
வானிலை தொடர்ந்து மாறி வருவதால், பயணிகள் தங்களது விமானங்களின் பயணங்கள் குறித்த நிலவரத்தை அதிகாரபூர்வ வலைத்தளங்களில் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

