சிங்கப்பூரின் ஏவுகணைகளை நவீனமயமாக்கும் சாதனங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

சிங்கப்பூரின் ஏவுகணைகளை நவீனமயமாக்கும் சாதனங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

2 mins read
7793d37d-78d7-49ce-99d5-5dd90c1841a6
இவ்வாண்டு ஏப்ரலில் அமெரிக்காவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையே மணிலாவில் நடைபெற்ற கூட்டு ராணுவப் பயற்சியில் ஹிமார்ஸ் ஏவுகணை பயன்படுத்தப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

சிங்கப்பூரின் எம்142 ஹிமார்ஸ் அதிவேக ஏவுகணைத் தாக்குதல் முறைகளை நவீனமயமாக்குவதற்கான சிங்கப்பூரின் கோரிக்கைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 73 மில்லியன் அமெரிக்க டாலர் (S$98.7 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சு திங்கட்கிழமை (ஜூன் 15) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஹிமார்ஸ்’ ஏவுகணை அமைப்பிற்கான 18 பொதுவான தீக்கட்டுப்பாட்டு (சிஎஃப்சிஎஸ்) மேம்பாட்டு உபகரணங்களை வாங்குவதற்கு சிங்கப்பூர் கோரிக்கை விடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த சிஎஃப்சிஎஸ் தொழில்நுட்பம், மின்னிலக்கச் செயல்முறை மூலம் ஏவுகணைகள் செலுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தவும் ஆயுதங்களை நிர்வகிக்கவும் உதவுகிறது. இது, இலக்குகளைத் துல்லியமாகத் தாக்குவதற்கும் ஒட்டுமொத்த செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என்று தற்காப்புத் துறை வெளியீடுகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஊடகங்களின் கேள்விக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு பதிலளித்தது.

ஹிமார்ஸ் ஏவுகணை அமைப்பு என்பது தரையிலிருந்து இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ஒரு முக்கியப் பாதுகாப்பு ஆயுதமாகும். இது கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் ஆயுதப்படையில் இருந்து வருகிறது.

சிங்கப்பூர் ஆயுதப்படை தொடர்ந்து நவீனமயமாக்கப்பட்டு வரும் வேளையில் ஹிமார்ஸ் அதில் முக்கியப் பங்கு வகிப்பதாக சிஎன்ஏயிடம் அமைச்சு விளக்கமளித்தது.

“எதிர்காலத்தில் மாறிவரும் செயல்பாடு, பயிற்சிகளுக்கு ஏற்ப இந்த மேம்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்றும் அமைச்சு கூறியது.

இந்த விற்பனையில் மேம்பாட்டு உபகரணங்கள் மட்டுமன்றி, அவற்றுக்கான கருவிகள், தொழில்நுட்ப ஆவணங்கள், உதிரிப்பாகங்கள், பயிற்சிகள், அமெரிக்க அரசாங்கம் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் தொழில்நுட்ப, பொறியியல், விநியோக ஆதரவுச் சேவைகள் போன்றவை உள்ளடங்கும்.

“இந்த மேம்பாட்டு உபகரணங்களைச் சிங்கப்பூருக்கு விற்பனை செய்வதால் வட்டாரத்தின் அடிப்படை ராணுவச் சமநிலை பாதிக்கப்படாது,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியது.

இருப்பினும், ஆசியாவின் அரசியல் நிலைத்தன்மைக்கும் பொருளியல் வளர்ச்சிக்கும் ஓர் உத்திபூர்வ பங்காளியாகத் திகழும் சிங்கப்பூரின் தற்காப்புத் திறனை இது மேலும் வலுப்படுத்தும் என்றும் தற்போதைய, எதிர்கால அச்சுறுத்தல்களைச் சிங்கப்பூர் எதிர்கொள்ள இது பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்