வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் 950,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் குடும்பங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் யு-சேவ் மற்றும் சேவை, பராமரிப்பு கட்டணக் கழிவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர பொருள், சேவை வரி பற்றுச்சீட்டு மற்றும் உத்தரவாத தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் கட்டணக் கழிவு வழங்கப்படுவதாக செப்டம்பர் 30ஆம் தேதியன்று நிதி அமைச்சு கூறியது.
பொருள், சேவை வரி மற்றும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க குறைந்த வருமான, நடுத்தர வருமான குடும்பங்களுக்கு இந்தக் கட்டணக் கழிவுகள் கைகொடுக்கும் என்று அமைச்சு தெரிவித்தது.
இந்தக் கட்டணக் கழிவு சராசரியாக, ஓரறை மற்றும் ஈரறை வீவக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் ஏறத்தாழ எட்டு மாத பொதுப் பயனீட்டுக் கட்டணத்தையும் மூவறை மற்றும் நாலறை வீவக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் கிட்டத்தட்ட நான்கு மாத பொதுப் பயனீட்டுக் கட்டணத்தையும் செலுத்த உதவும் என்று அமைச்சு கூறியது.
இம்முறை ஓரறை மற்றும் ஈரறை வீவக வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் மொத்தம் $190 மதிக்கத்தக்க யு-சேவ் கட்டணக் கழிவு பெறுவர்.
மூவறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் மொத்தம் $170 கட்டணக் கழிவையும் நாலறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் $150 கட்டணக் கழிவையும் ஐந்தறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் $130 கட்டணக் கழிவையும் பெறும்.
எக்சிக்யூட்டிவ் அல்லது பல தலைமுறையினர் வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு $110 கட்டணக் கழிவு வழங்கப்படும்.
கட்டணக் கழிவுகளைப் பெற பொதுமக்கள் எதுவும் செய்யத் தேவையில்லை.
தொடர்புடைய செய்திகள்
யு-சேவ் கட்டணக் கழிவுத் தொகையைக் கொண்டு குடும்பங்களின் எஸ்பி சர்விசஸ் பொதுப் பயனீட்டுக் கட்டணம் குறைக்கப்படும்.
சேவை, பராமரிப்புக் கட்டணத்திலிருந்து நகர மன்றங்கள் கட்டண கழிவுத் தொகையைக் கழித்துக்கொள்ளும்.