வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் 950,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர்க் குடும்பங்கள் வரும் ஜனவரியில் பயனீட்டு, பராமரிப்புக் கட்டணங்களில் தள்ளுபடிகளைப் பெறவிருக்கின்றன. வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவும் அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்தத் தள்ளுபடிகள் கொடுக்கப்படுகின்றன.
நிதியமைச்சு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தகுதிபெறும் குடும்பங்களுக்கு அவற்றின் பயனீட்டுக் கட்டணத்தில், $190 வரை யு-சேவ் தள்ளுபடியும் சேவை, பராமரிப்புக் கட்டணத்தில் அரை மாதத் தள்ளுபடியும் கொடுக்கப்படும்.
வீட்டு வகையைப் பொறுத்து இரண்டும் மாறுபடும்.
எடுத்துக்காட்டாக, நாலறை வீடுகளில் வசிப்போருக்கு யு-சேவ் கட்டணத்தில் $150 தள்ளுபடி கிடைக்கும். சேவை, பராமரிப்புக் கட்டணத்தில் அரை மாதத் தள்ளுபடி வழங்கப்படும். ஓரறை, ஈரறை வீடுகளில் குடியிருப்போருக்கு $190 யு-சேவ் தள்ளுபடியும் பராமரிப்புக் கட்டணத்தில் அரை மாதத் தள்ளுபடியும் கொடுக்கப்படும்.
மொத்தத்தில் தகுதிபெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இவ்வாண்டு (2025) ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரையிலான நிதியாண்டுக்கு, $760 யு-சேவ் தள்ளுபடியும் 3.5 மாதச் சேவை, பராமரிப்புத் தள்ளுபடியும் வழங்கப்படும்.
தகுதிபெறும் குடும்பங்கள், எஸ்பி சர்வீசஸ் நிறுவனத்துடன் கொண்டுள்ள கணக்குகளில் பயனீட்டுத் தள்ளுபடிகள் இயல்பாகச் செலுத்தப்படும். அதே நேரம் சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள் நகர மன்றங்களின் கணக்குகளில் போடப்படும்.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவையும் கூடியுள்ள பொருள் சேவை வரியையும் சமாளிப்பதற்குக் குறைந்த வருமான, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு உதவும் நிரந்தர ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தள்ளுபடிகள் அமைகின்றன.
ஒரு வீட்டுக்கும் மேல் சொத்துகளை வைத்திருப்போரைக் கொண்ட குடும்பங்கள், யு-சேவ் தள்ளுபடிகளுக்குத் தகுதிபெறமாட்டா என்று அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
யு-சேவ், சேவை, பராமரிப்புத் தள்ளுபடிகள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி மாதங்களில் வழங்கப்படுகின்றன.

