தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

950,000 குடும்பங்களுக்கு அக்டோபரில் யு-சேவ், சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடி

2 mins read
65e9892d-998b-40b1-af47-2164072d7c82
ஒட்டுமொத்தமாக, சிங்கப்பூர் வீவக குடும்பங்கள், 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரையிலான நிதியாண்டுக்கு யு-சேவ் தள்ளுபடியாக $760 வரை பெறும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க அரசாங்கம் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்களுக்கு அக்டோபரில் பயனீட்டு, பராமரிப்புக் கட்டணங்களுக்கான தள்ளுபடிகள் கிடைக்கும்.

தகுதிவாய்ந்த குடும்பங்கள் தங்களது வீட்டு வகையைப் பொறுத்து, பயனீட்டுக் கட்டணங்களுக்காக $190 வரை யு-சேவ் தள்ளுபடியையும் சேவை, பராமரிப்புக் கட்டணங்களுக்காக அதிகபட்சம் ஒரு மாதத்திற்கான தள்ளுபடியையும் பெறும் என்று நிதி அமைச்சு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

உதாரணமாக, நாலறை வீட்டில் வசிப்போர், தங்கள் யு-சேவ் மற்றும் சேவை, பராமரிப்புக் கட்டணங்களுக்காக முறையே $150யும் அரை மாதக் கட்டணத்தையும் தள்ளுபடியையும் பெறுவர். அதே நேரத்தில், ஓரறை, ஈரறை வீடுகளில் வசிப்போருக்கு முறையே $190யும் ஒரு மாதமும் தள்ளுபடி கிடைக்கும்.

இந்தப் பயனீட்டு மற்றும் சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள், தகுதிபெறும் குடும்பங்களின் முறையே எஸ்பி சர்வீசஸ், நகர மன்றக் கணக்குகளில் தானாகவே வரவு வைக்கப்படும்.

இந்தத் தள்ளுபடிகள், குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களையும் பொருள், சேவை வரியையும் (ஜிஎஸ்டி) சமாளிக்க உதவும் நிரந்தர ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி என மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இவை வழங்கப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக, தகுதிவாய்ந்த சிங்கப்பூர் வீவக குடும்பங்கள், 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரையிலான நிதியாண்டுக்கு யு-சேவ் தள்ளுபடியாக $760 வரை பெறும்.

இதற்கிடையே, தகுதிவாய்ந்த குடும்பங்கள் இதே காலகட்டத்தில், மொத்தம் மூன்றரை மாதங்கள் வரை சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகளைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்