உபி வட்டாரத்திலுள்ள காப்பிக் கடை ஒன்றில் தீ மூண்டதை அடுத்து 76 வட்டாரவாசிகள் வெளியேற்றப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை (மே 30) இரவு 11. 35 மணியளவில் உபி அவென்யூ புளோக் 301ல் இச்சம்பவம் நடந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
உணவுக் கடை ஒன்று தீ பிடித்ததைத் தொடர்ந்து புகையாலும் வெப்பத்தாலும் மற்ற கடைகள் சிலவும் பாதிக்கப்பட்டன.
இதன் தொடர்பில் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் புகையைச் சுவாசித்த அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மரின் பரேட் -பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், சம்பவம் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
விரைவாகச் செயல்பட்டதற்கு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு இணைப்பேராசிரியர் ஃபைஷால் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
புளோக்கின் மூன்றாம், நான்காம் தளங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் பின்னிரவு ஏறத்தாழ 1.40 மணிக்கு்த தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடிந்ததாகக் கூறினர்.
விசாரணை தொடர்கிறது.

