‘அசாசின்ஸ் க்ரீட்’ உள்ளிட்ட புகழ்பெற்ற கணினி விளையாட்டுத் தொடர்களைத் தயாரிக்கும் பிரான்சின் ‘யுபிசாஃப்ட்’ நிறுவனம் சிங்கப்பூரில் 70 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக புதன்கிழமை (அக்டோபர் 14) அறிவித்தது.
இழப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக பின்லாந்தில் உள்ள அதன் ‘ரெட்லிங்க்ஸ்’ ஸ்டூடியோவையும் மூடத் திட்டமிட்டுள்ளதால் அங்குள்ள 52 ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடும்.
2025-26 நிதியாண்டில் 1.5 பில்லியன் யூரோ (S$2.2 பில்லியன்) நிகர இழப்பைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அடுத்த இரண்டாண்டுகளில் 200 மில்லியன் யூரோ செலவினங்களைக் குறைக்க நிறுவனம் முயன்று வருகிறது.
கடந்த 2008ல் சிங்கப்பூரில் காலடிவைத்த யுபிசாஃப்ட் நிறுவனத்திற்குப் பொருளியல் மேம்பாட்டு மன்றம் பெரும் ஊக்கத்தொகை வழங்கியிருந்தது. ‘ஜஸ்ட் டான்ஸ்’, ‘ஃபார் க்ரை’, ‘வாட்ச் டாக்ஸ்’ உள்ளிட்ட புகழ்பெற்ற விளையாட்டுகளைத் தயாரித்து வெளியிடும் இந்நிறுவனம், 2023ல் சிங்கப்பூரில் தனது 15ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ‘ஒன்-நார்த்’ வணிகப் பூங்காவில் 5,000 சதுர மீட்டர் பரப்பளவிலான புதிய மூன்று மாடி ஸ்டூடியோவைத் திறந்தது. அப்போது அங்கு 450 ஊழியர்கள் பணியாற்றினர்.
இருப்பினும், 2024ல் வெளிவந்த ‘ஸ்கல் அண்ட் போன்ஸ்’ கணினி விளையாட்டு எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததும், நிறுவனத்தின் நிதிப் பின்னடைவுமே இந்நடவடிக்கைக்கு முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
அதேவேளையில், இக்கிளை ஜூலையில் வெளியிட்ட ‘அசாசின்ஸ் க்ரீட் பிளாக் ஃபிளாக் ரிசின்க்ட்’ விளையாட்டு, வெளிவந்த முதல் வாரத்திலேயே 3 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது.
எனினும், சிங்கப்பூர் கிளை நிறுவனத்தின் தயாரிப்புத் தேவைகளுக்கு ஏற்ப இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்தது. எனினும், உலகளாவிய செயல்பாடுகளில் சிங்கப்பூர் ஸ்டூடியோ தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் என்று அது குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட வடிவமைப்பாளர்கள், கணினி நிரலாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு நிதி, வேலைவாய்ப்பு உதவிகளை வழங்கத் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், ‘இ2ஐ’, ‘திறன், ஊழியரணி மேம்பாட்டு முகமை, படைப்பு ஊடக, பதிப்பக தொழிற்சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் cmpu@ntuc.or.sg எனும் மின்னஞ்சல் அல்லது 6213 8510 எனும் தொலைபேசி எண் வழியாக உதவி பெறலாம்.
