உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பாதை ஜூன் 30ஆம் தேதியன்று மீண்டும் முழுமையாகத் திறந்துவிடப்பட்டது.
2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அங்கு நிகழ்ந்த நிலச்சரிவின் காரணமாக இணைப்புப் பாதையில் மண்குவியல் ஏற்பட்டது. அங்கிருந்த கால்வாய்க்குள் மண் புகுந்தது.
இதையடுத்து, அங்கு மறுகட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மறுகட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் பூங்காவில் சேதமடைந்த பகுதி சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) ஜூன் 30ஆம் தேதியன்று தெரிவித்தது.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிளமெண்டி நார்த்ஆர்க் பிடிஓ வீடமைப்புத் திட்டத்தின் மேற்கு முனையில் உள்ள சரிவுப்பாதைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக வீவக கூறியது.
அந்த பிடிஓ வீடுகள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டதாக அது தெரிவித்தது.
மறுகட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உலு பாண்டான் இணைப்புப் பாதை கட்டங் கட்டமாகத் திறந்துவிடப்பட்டது.
அதன் கடைசி பகுதி 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, மீண்டும் முழுமையாகத் திறந்துவிடப்பட்டுள்ள உலு பாண்டான் இணைப்புப் பாதையை தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் ஜூன் 30ஆம் தேதியன்று நேரில் சென்று பார்த்தார்.
குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து அவர் அங்கு காலை நேர உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.
கிளமெண்டி நார்த்ஆர்க் குடியிருப்பாளர்களுக்காகத் திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு வசதிகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்கள் அமர்ந்து இளைப்பாறுவதற்கான கூடாரம், விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி நிலையங்கள், பூங்கா இணைப்புப் பாதைக்கு இட்டுச் செல்லும் சரிவுப்பாதை ஆகியவை அவற்றில் அடங்கும்.
குடியிருப்பாளர்களுக்கான பல்வேறு வசதிகளைக் கட்டும் பணிகளும் மறுசீரமைப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளும் நிறைவடைந்துவிட்டதாக திருவாட்டி சிம் கூறினார்.
இனி உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பாதையில் குடியிருப்பாளர்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து மகிழலாம் என்றார் அவர்.

