உலு திராம் தாக்குதல், பயங்கரவாத அச்சுறுத்தல் உச்சத்தில் நீடிப்பதையே நினைவூட்டுகிறது: பிரதமர் வோங்

2 mins read
1088c651-3eee-4805-9880-6a976a550eab
மே 17ஆம் தேதி ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல்நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல்நிலையத்தில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் உச்சத்தில் இருப்பதையே உணர்த்துவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக ஃபேஸ்புக் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டு உள்ளார்.

“வன்முறையைத் தூண்ட மத்திய கிழக்கில் நீடிக்கும் பூசலை உலகளவிலான பயங்கரவாத இயக்கங்கள் பயன்படுத்தி வரும் வேளையில், இதுபோன்ற தீவிரவாதச் சித்தாந்தங்கள் இங்கு எதிரொலிக்காதவாறு சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

“சுயமாக தீவிரவாதச் சிந்தனைக்கு ஆளாவது என்பது கவலையை அதிகரிக்கிறது. குறிப்பாக, நமது இளையர்கள் அதற்கு ஆளாவது கவலைக்குரியது.

“கடந்த ஈராண்டுகளில் சுயமாக தீவிரவாதச் சித்தாந்தத்திற்கு ஆளான நான்கு இளையர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கையாளப்பட்டு உள்ளனர்,” என்று திரு வோங் தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூரின் பாதுகாப்பு முகவைகளுடன் தாம் சந்திப்பு நடத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

உலு திராம் காவல்நிலையத்தில் மே 17ஆம் தேதி ஆடவர் ஒருவர் புகுந்து தாக்கியதில் காவல்துறை அதிகாரிகள் இருவர் உயிரிழந்தனர். மற்றோர் அதிகாரி காயமடைந்தார்.

தாக்குதலை நடத்திய ஆடவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அச்சம்பவம் தொடர்பில் ஏழு பேரை மலேசிய காவல்துறை தடுத்து வைத்து விசாரித்து வருகிறது.

கொல்லப்பட்ட சந்தேக நபர் ஜெமா இஸ்லாமிய இயக்கத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நேசுஷன் இஸ்மாயில் தெரிவித்து இருந்தார்.

“அச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வந்தபோதிலும் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை.

“உலு திராம் தாக்குதலைத் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவரம் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் நாம் நமது சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளோம்.

“நமது பாதுகாப்பு முகவைகள் தொடர்ந்து உலக, வட்டார பாதுகாப்பு மேம்பாட்டு நிலவரங்களை அணுக்கமாக ஆராயும்,” என்றும் பிரதமர் வோங் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்