யங்கூன்: மியன்மாரின் வடக்குப் பகுதியில் சிறுபான்மை இனக் குழுக்களைச் சேர்ந்த போராளிகளுக்கும் மியன்மார் ராணுவத்துக்கும் இடையேயான கடும் சண்டை நடந்து வருகிறது.
இந்தச் சண்டையால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மியன்மாரில் நடக்கும் இந்தச் சண்டையால் மக்கள் பாதிக்கப்படுவதை எண்ணி வருத்தம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை திங்கட்கிழமை தெரிவித்தது.
“மியன்மாரில் நடக்கும் சண்டை குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. குறிப்பாக, அந்நாட்டின் வடக்கில் உள்ள ஷான் மாநிலத்தில் இடம்பெற்ற வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் உள்நாட்டில் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்,” என ஐநா தலைமைச் செயலாளரின் பேச்சாளர் ஸ்டீஃபன் டுஜாரிக் கூறினார்.
அக்டோபர் 26ஆம் தேதி முதல் ஆண்கள், பெண்கள்,குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 33,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என தங்களது மனிதநேயப் பங்காளிகள் தெரிவித்ததாக அவர் மேலும் சொன்னார்.
“பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்,” என ஐநா தலைமைச் செயலாளர் கூறினார்.
“மனிதநேய உதவிகள் மக்களுக்கு கிடைப்பதற்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.