சிங்கப்பூர்க் கலங்கரை விளக்கங்களுக்கு நிலையற்ற எதிர்காலம்

சிங்கப்பூர்க் கலங்கரை விளக்கங்களுக்கு நிலையற்ற எதிர்காலம்

2 mins read
0807cdfd-1e4b-495b-9fa9-6e4e585cc6a3
1986ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சுல்தான் ஷோல் கலங்கரை விளக்கம். - கோப்புப்படம்: தேசிய மரபுடைமைக் கழகம்

துவாஸ் துறைமுகக் கட்டுமானப் பணிகள் நிறைவடையும்போது, ‘சுல்தான் ஷோல்’ (Sultan Shoal) கலங்கரை விளக்கம் கடற்பகுதியிலிருந்து மறைக்கப்பட்டிருக்கும் வகையில் அமைந்திருக்கும்.

அதேவேளையில், சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்படும் ‘லாங் ஐலண்ட்’ திட்டத்தால், ‘பிடோக் கலங்கரை விளக்கமும் கடலோரப் பகுதியிலிருந்து விலகியிருக்கும்.

சுல்தான் ஷோல், பிடோக் ஆகியவற்றைத் தவிர, சிங்கப்பூர் மேலும் மூன்று கலங்கரை விளக்கங்களை நிர்வகிக்கிறது.

ஜோகூர் தீபகற்பத்திற்கு அருகில் உள்ள புலாவ் பிசாங், பெட்ரா பிராங்காவில் உள்ள ‘ஹோர்ஸ்பர்க்’ கலங்கரை விளக்கம், சிங்கப்பூரின் தெற்கில், புலாவ் சத்துமுவில் உள்ள ராஃபிள்ஸ் கலங்கரை விளக்கம் ஆகியவையே அவை.

சுல்தான் ஷோல், பிடோக் கலங்கரை விளக்கங்களை இடமாற்றம் செய்யத் திட்டமில்லை என்று சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியுள்ளது.

இருப்பினும், மேம்பாட்டுத் திட்டங்களால் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று கடல்துறை நிபுணர்கள் ‘சிஎன்ஏ’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். குறிப்பாக, சுல்தான் ஷோல் கலங்கரை விளக்கத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று அவர்கள் கூறினர்.

“பாரம்பரியமாக சிங்கப்பூரின் மேற்கு எல்லையைப் பாதுகாத்து வந்த சுல்தான் ஷோல் கலங்கரை விளக்கம், கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தது,” என்று ‘எச்எஃப்டபிள்யூ’ (HFW) எனும் உலக கடல்துறைச் சட்ட நிறுவனத்தின் மூத்த மேலாளர் ராபர்ட் ஸ்பியரிங் கூறினார்.

நிலமீட்புத் திட்டங்களின் காரணமாக, அந்தக் கலங்கரை விளக்கத்தின் முதன்மை நோக்கம் பாதிக்கப்படுவதால், அதனை வேறு இடத்திற்கு மாற்றவேண்டிய தேவை ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.

“கப்பல் போக்குவரத்திற்குத் தேவையான வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து வழங்க முடியும் பட்சத்தில், ஒரு கலங்கரை விளக்கத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய தேவை எப்போதும் ஏற்படுவதில்லை.

“இருப்பினும், புதிய உள்கட்டமைப்புகள் பார்வையைப் பெருமளவில் மறைக்கும்போதோ கடல் போக்குவரத்துப் பாதுகாப்பைப் பாதிக்கும்போதோ அதனை வேறு இடத்திற்கு மாற்றவேண்டிய தேவை ஏற்படலாம்,” என்று ‘புரோட்டெக் என்ஜினியரிங்’ (BroadTech Engineering) நிறுவனத்தின் மேலாளர் டேனியல் டான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்