ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘கோக்கோபெல்லா’ தேங்காய் தயிரில், அறிவிக்கப்படாத பால் ஒவ்வாமைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தயிரை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு பயனீட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
சிங்கப்பூர் உணவு அமைப்பு சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஆஸ்திரேலியா நியூசிலாந்து உணவுத் தர நிர்ணய அமைப்பிடமிருந்து கிடைத்த அறிவிப்புக்கு பிறகு இந்தத் தயிர் தயாரிப்புகள் திரும்பப் பெறப்படுகின்றன. ‘மேட் பிரேண்ட்ஸ்’ நிறுவனம், இந்தத் தயிர்ப் பொருளை சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்கிறது.
“உணவில் உள்ள ஒவ்வாமைப் பொருள், சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தலாம்,” என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு சொன்னது.
பொதுவாக பால் பருகுவதால் ஒவ்வாமை ஏற்படுவதால் பாதிக்கப்பட்டோரும் பால் சர்க்கரையைச் செரிக்க முடியாத நிலையைக் கொண்டோரும் இந்த வகை தயிர்த் தயாரிப்புகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அவற்றை உட்கொண்டிருந்தால், உடல்நலனில் அக்கறை உடையோர் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
பொதுவாக பொதுமக்களுக்கு பால்பொருள், உணவுப் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தாது. ஆனால், பால் அருந்துவதால் ஒவ்வாமை உடையோருக்கு அது எதிர்வினைகளைத் தூண்டக்கூடும் என்று உணவு அமைப்பு கூறியது.
இந்த தயிர்ப் பொருளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையில் 150 கிராம், 500 கிராம் ‘கோக்கோபெல்லா’ தேங்காய் தயிர் பாக்கெட்டுகளும் புட்டிகளும் அடங்கும். இவற்றின் காலாவதி தேதிகள் ஆகஸ்ட் 22 முதல் அக்டோபர் 5 வரை உள்ளன.