18 வயதுக்குட்பட்டோர் பாதுகாப்புத் தரநிலைகளை நிறைவேற்றாத சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படக்கூடும்

18 வயதுக்குட்பட்டோர் பாதுகாப்புத் தரநிலைகளை நிறைவேற்றாத சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படக்கூடும்

2 mins read
a106c2cf-8809-4be4-8935-22f1ff455fb3
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, அமைச்சும் கொள்கை ஆய்வுக் கழகமும் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) நடத்திய கருத்தரங்கில் முக்கிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குழந்தைப் பாதுகாப்புத் தரநிலைகளை நிறைவேற்றாத சமூக ஊடகங்களை 18 வயதுக்குக் குறைந்தவர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படக்கூடும்.

தரநிலைகளைப் பூர்த்திசெய்யும் தளங்கள் இளம் பயனர்களுக்குத் தொடர்ந்து சேவைகளை வழங்க அனுமதிக்கப்படலாம். தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ அதனைத் தெரிவித்தார்.

அமைச்சும் கொள்கை ஆய்வுக் கழகமும் இணைந்து வெள்ளிக்கிழமை (ஜூலை 17) நடத்திய கருத்தரங்கில் அவர் பேசினார்.

வேறுபட்ட சூழலை நோக்கி விவாதம் அமைந்ததாகத் திருமதி டியோ கூறினார். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலைத் தளங்களால் எந்த அளவுக்கு வழங்கமுடியும் என்பதைப் பொறுத்தே அவற்றைப் பயன்படுத்துவதற்கான அனுமதி அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

“இது மாறுபட்ட சூழலாக இருக்கக்கூடும். இதில் சில சேவைகளும் சில தளங்களும் குழந்தைகள் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்குரிய வழிகளைச் சாத்தியமாக்கியுள்ளன. மேலும் அவை 18 வயதுக்குட்பட்டோருக்குத் தொடர்ந்து சேவைகளை வழங்குகின்றன.

“ஆனால் சில சேவைகள் இதற்கு முன்வரவில்லை அல்லது அவ்வாறு செய்ய இயலவில்லை என்றால், ஒரு சமூகமாக, 18 வயதுக்குட்பட்டோருக்கு இத்தகைய சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வழிகளைத் தடுப்பது நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்றார் திருமதி டியோ.

இருப்பினும், பயன்படுத்துவதற்கான வழிகளைக் கட்டுப்படுத்துவது, ‘தொடக்கம் அன்று என்பதையும் விருப்பமான முடிவும் அன்று’ என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

மின்னிலக்கச் சேவைகளைக் குழந்தைகள் தொடர்ந்து மிகவும் பாதுகாப்புடன் அணுகும் வகையில், பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தச் சமூக ஊடகத் தளங்களுடன் இணைந்து செயல்படுவதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக உள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சமூக ஊடகப் பயன்பாட்டின் தொடர்பில் ஏற்கெனவே முன்மொழியப்பட்ட கட்டங்கட்டமான அல்லது வயது அடிப்படையிலான திட்டத்தை அமைச்சரின் கருத்துகள் ஆதாரமாகக் கொண்டுள்ளன.

இத்திட்டத்தின்படி, சிறிய குழந்தைகள் சில தளங்களைப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கப்படக்கூடும்; அதேநேரம், மூத்த பதின்ம வயதினர் இணையப் பக்கங்களைப் படிக்கக்கூடிய முதிர்ச்சியைப் பெறும்போது அவர்களுக்கு படிப்படியாக அனுமதி வழங்கப்படக்கூடும்.

சிங்கப்பூரில் ஏற்கெனவே வயது தொடர்பான பல பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. இணையப் பாதுகாப்பிற்கான நடைமுறைக் கோட்பாடுகள், செயலிகளைப் பயன்படுத்துவதற்கான வயதை உறுதிப்படுத்தும் நிபந்தனைகள், சமூக ஊடகத் தளங்களுக்கான வருடாந்தர அறிக்கையைச் சமர்ப்பிக்கும் கடமைகள் ஆகியவை இதில் அடங்கும்.

கருத்தரங்கில் உலகளாவிய ஒழுங்குமுறை அமைப்பாளர்கள், சமூக, தொழில்துறையினர், கல்வியாளர்கள், நிபுணர்கள் உட்பட கிட்டத்தட்ட 150 பேர் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்