தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செயற்கை நுண்ணறிவு போலிச் சந்தை குறித்து சிங்கப்பூரில் எச்சரிக்கை

2 mins read
ab7d84b3-230d-4137-b1c2-5d07f2936e80
போலி செயற்கை நுண்ணறிவு பதிப்புகள் கடந்த ஆண்டு 3,000க்கும் மேற்பட்டோருக்கு விற்கப்பட்டன. - படம்: எஸ்பிஎச் மீடியா

மோசடியான செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் மறைமுகச் சந்தை வளர்ந்து வருவது, இணையப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாக சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அமைப்பு (சிஎஸ்ஏ) தெரிவித்து உள்ளது.

மாணவர்களும் ஊழியர்களும் தங்களது படிப்புக்கும் வேலைக்கும் செயற்கை நுண்ணறிவு மென்கருவிகளை உருவாக்கும் வேளையில் வஞ்சகர்கள் சிலரும் அதேபோன்ற பணியில் மோசடியாக ஈடுபடுகிறார்கள்.

‘சாட்ஜிபிடி’ (ChatGPT)யின் திருத்தப்பட்ட பதிப்பை விற்பதற்கென மறைமுகக் கருத்துரைப்புகள் நடைபெறுவது, மோசடியான உள்ளடக்கத்தைத் தடுக்கும் பாதுகாப்பு அரண்களை மீறுவதாக உள்ளது என்றும் அமைப்பு கூறியது.

2023ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இணைய நிலவரம் தொடர்பான அறிக்கையில் அது இந்த விவரங்களைத் தெரிவித்து உள்ளது.

‘ஓபன்ஏஐ’யின் சாட்பாட்களை திருத்தி வெளியிடப்பட்ட ஃபிராட்ஜிபிடி (FraudGPT), வோர்ம்ஜிபிடி (WormGPT) என்னும் போலி செயற்கை நுண்ணறிவுகள் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு 3,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுவது ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு மீதான அச்சத்தை அதிகரித்து உள்ளது.

அத்தகைய போலி செயற்கை நுண்ணறிவுப் பதிப்புகளால் இணையத் தாக்குதல்கள், மோசடிகள் மற்றும் பொய்யான தகவல்களை உருவாக்க முடியும் என்பது தொடர்பான அச்சம் அது.

இணையத்தில் எவ்வாறு ஊடுருவுவது என்பதை ‘ஃபிராட்ஜிபிடி’ சொல்லித் தருகிறது. அது ‘டார்க்வெப்’ எனப்படும் இணையக் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது.

அதேபோல, சாட்-ஜிபிடியின் பாதுகாப்பு அரண்களை உடைக்க உருவாக்கப்பட்டது வோர்ம்ஜிபிடி.

2023ஆம் ஆண்டு இணையப் பாதுகாப்பு அமைப்பு பகுப்பாய்ந்த இணைய ஊடுருவல் மோசடிகளில் ஏறக்குறைய 13 விழுக்காடு, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தின.

இதற்கிடையே, 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சாட்ஜிபிடி தொடங்கப்பட்டது முதல் இணைய மோசடிக்காரர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக இணையப் பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்தன.

நிறுவனங்களின் கணினிகளில் ஊடுருவும் வகையில் அவற்றில் உள்ள மென்பொருள் தொடர்பான ரகசியத் தகவல்களைத் திரட்ட மோசடிக்காரர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாகவும் அவை கூறின.

குறிப்புச் சொற்கள்