சிங்கப்பூருக்கு சரவாக்கிலிருந்து மின்சாரம் விநியோகிக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக, கடலுக்கு அடியில் கம்பிவடங்கள் அமைக்கும் பணிகள் 2026ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும். இதனை சரவாக் மாநில முதலமைச்சர் அபாங் ஜொஹாரி துன் ஒபெங் தெரிவித்தார்.
சன்டெக் சிட்டியில் உள்ள சிங்கப்பூர் அனைத்துலக மாநாட்டு, கண்காட்சி மையத்தில் வியாழக்கிழமை (அக்டோபர்16) நடைபெற்ற மாபெரும் சரவாக் கண்காட்சியின் தொடக்கவிழாவில் அவர் கலந்துகொண்டார். அந்நிகழ்வில் பேசிய திரு அபாங், சிங்கப்பூருடன் மின்விநியோகத்துக்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு மின்விநியோகம் அளிக்கக்கூடிய சாத்தியம் பற்றி மலேசிய அரசாங்கத்துடன் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அதன்படி 1 கிகாவாட் அளவிலான மின்சக்தியை சரவாக் மாநிலம் குறிப்பாக அதன் நீர்நிலைகளில் உற்பத்தி செய்து சிங்கப்பூருக்கு விநியோகம் செய்யும்.
நீருக்கு அடியில் இயங்கும் கம்பி வடங்களின் பற்றாக்குறை பிரச்சினை 2025ஆம் ஆண்டுக்குள் தீர்ந்துவிட்டால், 2026ஆம் ஆண்டில் திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் அபாங் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
“மலேசிய அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், சிங்கப்பூர் மற்றும் சரவாக் அரசாங்கங்கள் கம்பி வடங்களின் கட்டமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கப்படவேண்டும் என்று முடிவெடுத்துள்ளன” என அவர் உறுதிப்படுத்தினார்.
சிங்கப்பூர் எரிசக்திச் சந்தை ஆணையம் ‘செம்ப்கார்ப் யுட்டிலிட்டீஸ்’ நிறுவனத்துக்கு நிபந்தனைகளுடனான ஒர் ஒப்புதலை அளித்துள்ளதாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி அறிவிப்பில் கூறியுள்ளது. அந்த ஒப்புதலின்படி, ‘சரவாக் எனர்ஜி’ என்ற குழுமத்துடன் செம்ப்கார்ப் யுடிலிட்டீஸ் இணைந்து செயலாற்றி, 1 கிகாவாட் அளவிலான குறைந்த கரிம மின்சக்தியை சரவாக்கிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யவேண்டும்.
இருநாடுகளின் மின்னியல் கூட்டுறவில் இது புதிய அத்தியாயம் என்று ஆணையம் செய்திக் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. சரவாக்கின் மக்கள்தொகை 2.5 மில்லியன் ஆகும். எனவே அதன் தேவைகளுக்குபின் மிஞ்சிய மின்சக்தியை அது அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்கிறது.