வேலை நிறுத்த உத்தரவை மீறிய குற்றத்திற்காக ஜாய்ண்ட் பசிபிக் ஓஷன் அண்டர்வாட்டர் சர்வீசஸ் (ஜேபிஓ) நிறுவனத்திற்கு $115,500 அபராதத்தை ஜூலை மாதம் மனிதவள அமைச்சு விதித்தது.
அது கடலுக்கடியில் ஆய்வு, கடலில் முக்குளிப்பு போன்ற சேவைகளை வழங்கும் நிறுவனம். அந்நிறுவனத்திற்கு 2018ஆம் ஆண்டு பணியிடத்தில் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத குற்றத்திற்காக வேலை நிறுத்த உத்தரவை அந்த அமைச்சு வழங்கியது.
ஆனால், அந்த உத்தரவை மீறி அது தொடர்ந்து கடலில் முக்குளிப்புப் பணியை மேற்கொண்டு வந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.
ஜேபிஓ நிறுவனம் தனது ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக அமைச்சு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
‘ஜேபிஓ சேலஞ்சர்’ எனப்படும் முக்குளிப்பிற்கு பயன்படுத்தப்படும் படகில் மனிதவள அமைச்சு ஆய்வு மேற்கொண்டது. அப்போது அங்கு பல பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதை அது கண்டறிந்தது.
முக்குளிப்பதற்குத் தேவைப்படும் பொருள்களின் பற்றாக்குறை, ஊழியர்களுக்குத் தொழில்முறை முக்குளிப்புப் பயிற்சியின்மை ஆகியவை அந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளில் அடங்கும்.
பின்னர் ஜேபிஓ நிறுவனத்திற்கு வேலை நிறுத்த உத்தரவை மனிதவள அமைச்சு 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வழங்கியது எனத் தெரிவிக்கப்பட்டது.
மறுஆய்வு 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஜேபிஓ நிறுவனம் வேலை நிறுத்த உத்தரவை மீறியதை மனிதவள அமைச்சு கண்டறிந்தது.
தொடர்புடைய செய்திகள்
“வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் வேலை நிறுத்த உத்தரவுக்கு அனைத்து நிறுவனமும் இணங்க வேண்டும். அந்த உத்தரவின்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆணையருக்குத் திருப்தி அளிக்கும் வரை பணியிடத்தில் எந்தவொரு பணியும் மேற்கொள்ளப்படக்கூடாது,” என மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.