இடிபாடுகளுக்குள் நுழைந்து மிகக் குறுகிய இடங்களுக்குள்ளும் தேடல், மீட்பு நடவடிக்கைகளை சைபோர்க் (Cyborg) இயந்திரக் கரப்பான்பூச்சிகள் மிகவும் திறமையாக கையாண்டு வருகின்றன.
இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த அல்லது நீரில் மூழ்கியுள்ள இடங்களிலும் தேடுதல் பணிகளை மேற்கொள்வதற்காக அவற்றைப் பயன்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் ஜப்பானின் வசிடா பல்கலைக்கழகமும் இணைந்து நீக்குப்போக்கான முக்குளிப்பு உடை ஒன்றை அந்த இயந்திரக் கரப்பான்பூச்சிகளுக்குத் தகுந்த வகையில் உருவாக்கியுள்ளன.
இந்தப்பூச்சிகள் தண்ணீருக்கு அடியிலும் உயிர்வாயு குறைவாக உள்ள சூழல்களிலும் மூன்று மணி நேரம் வரை உயிர்வாழ அது வழிவகை செய்கிறது.
ஒவ்வொரு கரப்பான்பூச்சியிலும் சிறிய நெகிழி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அது, மின்சில்லு கொண்ட மின்சுற்றுத் தகடை இழுத்துச் செல்லும். அதில் கண்காணிப்புக் கருவி, உணர்விகள், இடத்தைக் கண்டறிவதற்கான தொடர்பு வசதிகள் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றைப் பயன்படுத்தி பேரிடர்ப் பகுதிகளில் சிக்கித் தவிப்போரைஅவை கண்டறிய முடியும்.
2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தேடி மீட்கும் முயற்சியில் பத்து முறைக்கு மேல் அத்தகைய கரப்பான்பூச்சிகள் வெற்றிகரமாக ஈடுபடுத்தப்பட்டன.
இருப்பினும், அவற்றின் பயன்பாட்டில் சில வரம்புகள் இருந்தன.
உயிர்வாழத் தங்களுடைய இயற்கையான சுவாச அமைப்பையே சார்ந்துள்ள அப்பூச்சிகளால், நீரில் மூழ்கியிருக்கும்போது உயிர்வாயுவை உறிஞ்ச இயலாது.
இந்தச் சவாலை எதிர்கொள்வதற்காக, உயிர்வாயு உருவாக்கும் தொட்டி, நீக்குப்போக்கான கவசம், சிலிக்கானால் ஆன நான்கு உயிர்வாயு விநியோகக் குழாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறிய உடையை ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
‘மடகாஸ்கர் ஹிஸிங்’ கரப்பான்பூச்சிகளுக்கு அந்த உடை அணிவிக்கப்பட்டு, வெற்றிகரமாகச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அக்குழுவின் ஆய்வு முடிவுகள், ஜூன் 29ஆம் தேதி ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்னும் அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.

