ஆங்கிலப் பயன்பாடு அதிகரித்தாலும் தமிழ் ஆர்வம் குறையவில்லை: ஆய்வு

ஆங்கிலப் பயன்பாடு அதிகரித்தாலும் தமிழ் ஆர்வம் குறையவில்லை: ஆய்வு

2 mins read
ac13166a-1157-4a40-a929-17de9133d7b5
கொள்கை ஆய்வுக் கழகம் 2024ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்தியர்களில் 92.9 விழுக்காட்டினர் தங்களால் தமிழ் மொழியை நன்றாக அல்லது மிக நன்றாகப் பேச முடியும் என்று கூறியிருந்தனர். - வரைகலை: செயற்கை நுண்ணறிவு

சிங்கப்பூர் இல்லங்களில் ஆங்கில மொழியின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழ்மொழி இன்னும் வலுவாகவே இருப்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

கொள்கை ஆய்வுக் கழகம் 2024ஆம் ஆண்டில் அந்த ஆய்வை மேற்கொண்டது. அதன்படி, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்தியர்களில் 92.9 விழுக்காட்டினர் தங்களால் தமிழ் மொழியை நன்றாக அல்லது மிக நன்றாகப் பேச முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, இளையர்கள், பட்டதாரிகளிடையே தமிழ்மொழிப் புலமை அதிகமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

‘சிங்கப்பூரில் மொழி அடையாளம், நிர்வாகம்: இனம், சமயம், மொழி குறித்த கொள்கை ஆய்வுக் கழகத்தின் அண்மைக் கண்டுபிடிப்புகள்’ எனும் அந்த அறிக்கையில், சிங்கப்பூர்க் குடிமக்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நிரந்தரவாசிகளில் அதிக விழுக்காட்டினர் தமிழை மிகவும் நன்றாய்ப் பேசுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பங்கேற்பாளர்கள் தாமாகத் தெரிவித்த மொழித் திறன், சமூக, வேலையிடச் சூழல்களில் மொழியின் பயன்பாடு, பல்வேறு சூழல்களில் ‘சிங்கிலிஷ்’ பயன்பாட்டின் பொருத்தம், மொழி, அடையாளம், ஒருங்கிணைப்பு, வேறுபாடு, கொள்கை குறித்த பார்வைகள், ஆங்கிலத்தை நன்றாகப் பேசுவதற்கான ஊக்கம் ஆகியவற்றை ஆராய்ந்தது.

இந்திய நிரந்தரவாசிகளில் கிட்டத்தட்ட பத்தில் ஏழு பேர் (68.2 விழுக்காடு) நண்பர்களுடன் அடிக்கடி, மிக அடிக்கடி அல்லது எப்போதும் தமிழைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டனர். ஒப்புநோக்க, சிங்கப்பூர்க் குடிமக்களைப் பொறுத்தவரை, அது ஐவரில் மூவர் (63.3 விழுக்காடு) என்ற நிலையில் இருந்தது.

குறைந்த கல்வித் தகுதி கொண்டவர்கள், இந்திய நிரந்தரவாசிகள், நண்பர்களுடன் தமிழை அடிக்கடி பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.

ஆய்வில் பங்கெடுத்த ஒட்டுமொத்த இந்தியர்களில், 2024ஆம் ஆண்டில் 68.8 விழுக்காட்டினர் தங்களால் தமிழை நன்றாக அல்லது மிக நன்றாகப் பேச முடியும் எனத் தெரிவித்திருந்தனர். அது 2018ஆம் ஆண்டில் இருந்த 64.1 விழுக்காட்டைவிட சற்று அதிகமாகும்.

ஆய்வில் பங்கெடுத்த தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தோர், தமிழ் வாய்மொழித் திறன் பற்றிச் தாமாகத் தெரிவித்த விகிதம் பெரும்பாலும் நிலையாகவே இருந்தது.

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்களில் பத்தில் ஏறக்குறைய ஏழு பேர் மொழியை மிகவும் நன்றாகப் பேசுவதாகவும், சமயம், அரசியல், தொழில்நுட்பம் போன்ற கருத்துகளைப் பற்றி தங்களால் விவாதிக்க முடியும் என்றும் கூறினர்.

பதிலளித்த இந்தியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் தாங்கள் நண்பர்களுடன் அடிக்கடி, மிக அடிக்கடி அல்லது எப்போதும் தமிழைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

உயர்நிலைப் பள்ளி அல்லது அதற்குக் குறைவான கல்வித் தகுதி கொண்ட இந்தியர்களில், 73.4 விழுக்காட்டினர் நண்பர்களுடன் அடிக்கடி, மிக அடிக்கடி அல்லது எப்போதும் தமிழைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர்.

அதே நேரம், பட்டம் பெற்ற இந்தியர்கள், நண்பர்களுடன் தமிழில் ஒருபோதும் பேசுவதில்லை அல்லது அரிதாகவே பேசுவதாகக் குறிப்பிடக்கூடும் என்றும் ஆய்வு கூறியது.

குறைவான கல்வித் தகுதியுடைய அல்லது இந்திய நிரந்தரவாசிகள், நண்பர்களுடன் அடிக்கடி தமிழைப் பயன்படுத்தக்கூடும் என்றும் ஆய்வு கூறியது. அதே வேளையில், வயது, பாலினம், வீட்டின் வகை, வருமானம் உள்ளிட்ட பிற அம்சங்கள் அதில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும் ஆய்வு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்