வேலையின்மை விகிதம் ஜூனில் குறைந்தது

வேலையின்மை விகிதம் ஜூனில் குறைந்தது

2 mins read
bfab2625-7d00-4c51-90ca-b0a17b124768
மே மாதம் 3 விழுக்காடாக இருந்த சிங்கப்பூரர்களின் வேலையின்மை விகிதம் ஜூனில் 2.8 விழுக்காட்டுக்கு இறங்கியது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் வேலையின்மை விகிதம் ஜூன் மாதம் குறைந்ததாக இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான ஊழியர் சந்தை நிலவரத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அந்தத் தரவுகளை உள்ளடக்கிய மனிதவள அமைச்சின் அறிக்கை புதன்கிழமை (ஜூலை 31) வெளியிடப்பட்டது.

சிங்கப்பூரர்களின் வேலையின்மை விகிதம் மே மாதம் 3 விழுக்காடாக இருந்தது. ஜூனில் அது 2.8 விழுக்காட்டுக்கு இறங்கியது.

அதேபோல, சிங்கப்பூர்வாசிகளின் வேலையின்மை விகிதம் 2.9 விழுக்காட்டில் இருந்து 2.7 விழுக்காட்டுக்குக் குறைந்தது. சிங்கப்பூர்வாசிகள் என்பது சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் உள்ளடக்கியது.

ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2.1 விழுக்காட்டில் இருந்து 2 விழுக்காடாக சுருங்கியது.

2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான பொருளியல் நெருக்கடியற்ற ஆண்டுகளில் காணப்பட்ட நிலவரத்திற்கு உட்பட்டதாக இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டின் வேலையின்மை விகிதம் பதிவாகி உள்ளது.

இதற்கிடையே, வளர்ந்து வரும் துறைகளில் வேலை செய்யும் சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை தொடர்ந்து 2024 இரண்டாம் காலாண்டிலும் ஏற்றம் கண்டது.

நிதிச் சேவைகள், தகவல்-தொடர்பு, சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள், நிபுணத்துவ சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியவை அந்தத் துறைகள்.

நல்ல வேலையையும் சம்பள அனுகூலன்களையும் வழங்கக்கூடிய துறைகள் அவை.

துறை வாரியான நிலவரத்தையும் இதர விவரங்களையும் இறுதி செய்யப்பட்ட ஊழியர் சந்தைத் தரவுகள் பிரதிபலிக்கும். அந்தத் தரவுகள் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றாம் காலாண்டு இறுதியில் வெளிடப்படும்.

சில்லறை வர்த்தகத் துறையில் பணியாற்றும் சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை பருவத்திற்கேற்ப அடைந்த வீழ்ச்சியை வளர்ச்சித் துறைகளில் காணப்பட்ட எழுச்சி ஈடுகட்டியதை தரவுகள் காட்டின.

அது சிங்கப்பூர்வாசிகளின் ஒட்டுமொத்த வேலை நிலவர வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது.

ஆண்டிறுதி விழாக்காலங்களுக்குத் தயாராக ஒவ்வோர் ஆண்டின் இறுதிக் காலாண்டிலும் முதலாளிகள் அதிகமான தற்காலிக ஊழியர்களை வேலையில் அமர்த்துவது அதற்குக் காரணம் என்று மனிதவள அமைச்சு விளக்கியது.

“சிங்கப்பூர்வாசிகளின் வேலை நிலவரத்தில் சிறிய இறக்கம் காணப்பட்டபோதிலும் அது எதிர்பார்க்கப்பட்டதுதான். இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூர்வாசிகளின் வேலைகளில் ஏற்ற, இறக்கம் சிறிதாகக் காணப்படுவது இயல்பான ஒன்றுதான்,” என்று அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

எவ்வாறிருப்பினும், சிங்கப்பூரில் வேலையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இரண்டாம் காலாண்டில் வேலையில் இருந்தோர் எண்ணிக்கை 11,330 கூடியது. அந்த எண்ணிக்கை முதலாம் காலாண்டில் 4,700ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்