அண்டைவீட்டாரின் தீராப் பிரச்சினை: நாடாளுமன்ற உறுப்பினர் ஆதங்கம்

2 mins read
3cd1bd53-0509-4ffd-902e-d05e9e63a0ac
சம்பந்தப்பட்ட அண்டை வீட்டினர் குடியிருக்கும் பூன் கெங் ரோடு வீவக அடுக்குமாடி வீடு. - படம்: கூகல் மேப்ஸ்

பூன் கெங் ரோடு, புளோக் 22 வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பில் வசிக்கும் அண்டை வீட்டார்களுக்கு இடையிலான பிரச்சினை குறித்து தாம் அறிந்துள்ளதாக ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோ தெரிவித்துள்ளார்.

அது சார்ந்த அரசாங்க அமைப்புகளுடன் தாம் தொடர்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது குடியிருப்புப் பேட்டையில் நடந்துவரும் தீராப் பிரச்சினையாக அது உருவெடுத்துள்ளது என்று அவர் ஃபேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) வெளியிட்ட பதிவில் கவலை தெரிவித்துள்ளார்.

“நமது அமைப்புகள் மிகச் சிறந்த முயற்சிகளை எடுத்தபோதும் எனது மேற்பார்வையில் உள்ள குடியிருப்பில் தீர்க்கமுடியாத பிரச்சினையாக அந்த அண்டை வீட்டார் இடையிலான கருத்துவேறுபாடு உருவெடுத்துள்ளது மிகுந்த கவலையளிக்கிறது,” என்று திரு லோ தமது உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

அப்பிரச்சினை குறித்து குடியிருப்பாளர்கள் சிலர் திரு ஷானை நேரில் சந்தித்து மற்றொரு வீட்டுக் குடியிருப்பாளரின் செயல்பாடுகளை விவரித்துள்ளனர். பிள்ளைகள் தேர்வுக்கு தயாராவது தடைபட்டு, மின்தூக்கியில் தனியாகச் செல்லத் தயங்குவதாகவும் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இருசாராரும் ஜனவரி மாதத்தில் தத்தம் காணொளிகளை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

கடந்த ஜனவரி 12ம் தேதி, ‘@AntiCrime-b1h’ என்ற அடையாளத்துடன் ஆடவர் ஒருவர், தமது வீட்டுக்கு வெளியே ஒன்றுகூடிய மூன்று பெண்கள் வெளியில் இருந்த சீனப் புத்தாண்டு அலங்காரங்களைச் சேதப்படுத்தியதைக் காணொளியாக வெளியிட்டார்.

பதிலுக்கு, ஜனவரி 18ம் தேதி ‘டிக்டாக்’கில் அந்த பெண்களின் உறவினர் ஒருவர் அந்த ஆடவர் மற்ற அண்டை வீட்டார்களை அவமதிப்பது போன்ற குறுங்காணொளிகளைப் பதிவிட்டார்.

“அந்த ஆடவர் பல ஆண்டுகளாக இரவுபகல் பாராமல் குழாய்களை அடித்து சத்தம் எழுப்பி அண்டைவீட்டார்களை அச்சுறுத்திவந்துள்ளார். மின்தூக்கியில் அவர்களைச் சந்திக்க நேர்ந்தபோது மிரட்டினார்,” என்று பதில் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘ஸ்டோம்ப்’ ஊடகம் அந்த ஆடவரைச் சந்தித்தபோது, தம்மீது தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார். இருதரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். காவல்துறை விசாரணை தொடர்கிறது.

இந்தப் பிரச்சினை, நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோவின் அறிவுரையின்படி, சமூக சமரச நிலையத்தின் (CMC) விசாரணைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பலனில்லாமல் தற்போது சமூக சர்ச்சை தீர்வு மன்றங்களுக்கு (CDRT) சென்றும் தீர்வு எட்டப்படாத நிலையில் உள்ளது.

அரசாங்க அமைப்புகளை இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடர்புகொண்டு புகார்களைக் கவனிக்கும்படி நினைவூட்டியதாக திரு ஷான் கூறினார். வீவக, காவல்துறை உள்பட அதிகாரிகளிடம் பிரச்சினையை விட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புத்தாண்டின் தொடக்கத்தில் அண்டை வீட்டார் அனைவரும் ஒற்றுமையான சூழலை உருவாக்க புரிந்துணர்வுடன் செயல்படுவதை தாம் எதிர்பார்ப்பதாக திரு ஷான் நம்பிக்கை தெரிவித்தார். நமது குடியிருப்புகள் கட்டமைப்பில் மட்டும் உறுதியாக இல்லாமல் நல்லுறவுகளையும் நெருக்கமாக வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்