முறையற்ற சந்தைப்படுத்துதல்: நான்கு பயிற்சி கழகங்களுக்கு எதிராக நடவடிக்கை

2 mins read
7e583ba9-1535-422c-af5f-7c166540703e
முறையற்ற சந்தைப்படுத்துதல் அணுகுமுறைகள் தொடர்பாகப் பொதுமக்கள் பலர் புகார் செய்ததை அடுத்து, வரும் டிசம்பர் 1 முதல் புதிய விதிமுறைகள் நடப்பிற்கு வரவுள்ளான. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தின்கீழ் பயிற்சிகளை வழங்கும் பயிற்சிக் கழகங்கள், மூன்றாம் தரப்பினரைப் பயன்படுத்தி பயிற்சிகளைச் சந்தைப்படுத்தக்கூடாது. - படம்: ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு

சந்தைப்படுத்துதல் விதிமுறைக்கு உட்பட்டு நடக்காத இரண்டு பயிற்சிக் கழங்களுக்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு தண்டனை விதித்துள்ளது.

விதிமீறலில் ஈடுபட்ட மேலும் இரண்டு பயிற்சிக் கழகங்களுக்கு அது எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விதிமீறல்கள் கடந்த ஆண்டு மற்றும் இவ்வாண்டு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அக்டிரேன் அகாடமி வழங்கிய பயிற்சிகளை சந்தைப்படுத்தியோரை அப்பயிற்சிக் கழகம் மேற்பார்வையிடவில்லை.

இதன் காரணமாக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்புடனான அந்த ஒப்பந்தம் செப்டம்பர் 30ஆம் தேதியன்று ரத்து செய்யப்பட்டது.

பயிற்சிகளைச் சந்தைப்படுத்திய முகவர்களில் குறைந்தது ஒருவர் பயிற்சி பெற்றவர்களுக்கு ரொக்கம் தந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அக்டிரேன் அகாடமிக்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு இனி நிதி வழங்காது.

ஃபர்ஸ்ட்காம் அகாடமி, தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு பயிற்சிக் கழகமாகும்.

இப்பயிற்சிக் கழகம் வழங்கும் பயிற்சித் திட்டங்களைச் சந்தைப்படுத்த பரிந்துரைத் திட்டம் ஒன்று பயன்படுத்தப்பட்டதால் அதனுடான ஒப்பந்தம் இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

முறையற்ற சந்தைப்படுத்துதல் அணுகுமுறைகள் தொடர்பாகப் பொதுமக்கள் பலர் புகார் செய்ததை அடுத்து, வரும் டிசம்பர் 1லிருந்து புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தின்கீழ் பயிற்சிகளை வழங்கும் பயிற்சிக் கழகங்கள், மூன்றாம் தரப்பினரைப் பயன்படுத்தி பயிற்சிகளைச் சந்தைப்படுத்தக்கூடாது.

மூன்றாம் தரப்பு முகவர்கள் பயிற்சிகளை மூர்க்கத்தனமாகச் சந்தைப்படுத்துகின்றனர்.

விற்பனை இலக்குகளை எட்ட அவர்கள் அவ்வாறு செய்கின்றனர்.

மாறாக, பயிற்சியில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் பயிற்சியின் தரத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

“இந்த முறையற்ற சந்தைப்படுத்துதலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால், பயிற்சித் துறைக்கு களங்கம் ஏற்பட்டுவிடும். புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களின் ஆர்வத்தை இது சீர்குலைத்துவிடும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்