நியாயமற்ற விற்பனை நடைமுறைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட அழகு, ஆரோக்கியப் பராமரிப்பு நிறுவனத்திடமிருந்து பொருள் வாங்கிய வாடிக்கையாளர்கள் $1 மில்லியன் வரை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிஎன்ஏ பிராண்ட்ஸ் நிறுவனம் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் வியாழக்கிழமை (ஜூலை 30) தெரிவித்தது.
நிறுவனம், இத்தகைய தவறான நடைமுறைகளை நிறுத்துவதாக உறுதிகூறியுள்ளது என்று அது சொன்னது. விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறான நடத்தைகளுக்கு எதிராக முறைப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும் நிறுவனம் உறுதியளித்திருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.
த மினரல் பூட்டிக், பியூட்டிக், எஸ்ஏஇ-ரென், ஜிங்ரான், ஹார்மோனிக்ஸ், அல்லூரா, கொம்ஃபீட் உள்ளிட்ட பெயர்களில் அழகு, ஆரோக்கிய விற்பனை நிலையங்களை டிஎன்ஏ பிராண்ட்ஸ் நிறுவனம் இயக்கி வருகிறது.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து டிஎன்ஏ பிராண்ட்ஸ் கிளைகளில் பொருள்களை வாங்கியோருக்கு அல்லது சேவைகளைப் பெற்றோருக்குப் பணம் திரும்பக் கிடைக்கத் தகுதி இருக்கக்கூடும் என்று ஆணையம் கூறியது.
நிறுவனத்தின் நடைமுறைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் வட்டார மேலாளரும் ஊழியர்கள் சிலரும் சேர்ந்து வாடிக்கையாளர்களுக்கு நெருக்குதல் தரும் தந்திரங்களைப் பயன்படுத்தி, விரும்பாத பொருள்களை வாங்குமாறு வற்புறுத்தியது தெரியவந்தது.
சிகிச்சை முடிந்த பிறகும், வாடிக்கையாளர்களை அறையிலேயே வைத்திருக்க ஊழியர்கள் சிலர் சில உத்திகளைக் கையாண்டனர். முகப்பூச்சைப் போட்டு, அவர்கள் சம்மதிக்கும் வரை பொருள்களை விற்கத் தொடர்ந்து வற்புறுத்தியதாக ஆணையம் தெரிவித்தது.
வேறு சிலர் வாடிக்கையாளர்களின் செலவு செய்யும் திறனைக் கணக்கிட அவர்களிடம் எத்தனை கடன் அட்டைகள் உள்ளன என்று கேட்டுள்ளனர்; மேலும் முதியோர் சிலரிடம் அழகு சிகிச்சைத் தொகுப்புத் திட்டங்களுக்குப் பணம் செலுத்த அவர்களின் மத்திய சேமநிதி இருப்பைப் பற்றியும் கேட்டுள்ளனர்.
நிறுவனத்தின் இயக்குநர்கள் வாடிக்கையாளர்களை வற்புறுத்தும் நடைமுறைகளில் பங்கேற்கவில்லை அல்லது உத்தரவிடவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், எதிர்காலத்தில் ஏற்படும் இதுபோன்ற தவறான நடத்தைகளுக்கு எதிராக முறையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது. தவறு இழைத்த ஊழியர்களை டிஎன்ஏ பிராண்ட்ஸ் நிறுவனம் பணிநீக்கம் அல்லது இடைநீக்கம் செய்துள்ளது. விற்பனைக்கான ஊக்கத்தொகையை நிறுவனம் வழங்கவில்லை என்றும் ஆணையம் கூறியது.
பாதிக்கப்பட்டோர் பணத்தைத் திரும்பப் பெறத் தகுதி உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கத்தைத் தொடர்புகொள்ளலாம்: தொலைபேசி எண்: 6277 5100 (வார நாள்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) அல்லது பயனீட்டாளர் சங்கத்தின் இணையத்தளத்தின் வழியாகப் புகார் செய்யலாம்.

