தனது இரு விற்பனை நிலையங்களில் நடந்த தவறான வர்த்தக நடைமுறைகளை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க நீதிமன்றம் விதித்த உத்தரவுகளை மீறிய நிர்வாக இயக்குருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்த நிலையில், ‘நெயில் பேலஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைடன் செங்கின் சிறைத் தண்டனை நான்கு மாதங்களிலிருந்து மூன்று மாதமாகத் திங்கட்கிழமை (மே 19) குறைக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுகளில் ஒன்றை அந்நிறுவனம் நிறைவேற்றியதால் அவரின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
2022ஆம் ஆண்டு புக்கிட் பஞ்சாங் பிளாசா, ஈஸ்ட் பாயிண்ட் கடைத்தொகுதி ஆகிய இடங்களில் உள்ள ‘நெயில் பேலஸ்’ வர்த்தக நிலையங்களில் வழங்கப்பட்ட ஓர் சிகிச்சைக்குப் பதிவுசெய்ய வாடிக்கையாளர்களை அந்நிறுவனம் தவறாக வழிநடத்தியதாக நீதிமன்றம் கூறியது.
அதனை உடனடியாக நிறுத்தும்படியும் அதுகுறித்து நாளிதழ்களில் அறிக்கை வெளியிடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் அதை வெளியிட வேண்டுமென்றும் அது சொன்னது. ஆனால், அதே ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியில்தான் ‘நெயில் பேலஸ்’ அவ்வறிக்கையை வெளியிட்டது.
மேலும், நீதிமன்ற உத்தரவு குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கவும் அந்நிறுவனம் தவறியதாகக் கூறப்பட்டது.
அக்குற்றத்திற்காக செங்கிற்கு 2024ஆம் ஆண்டு $10,000 அபராதமும் அதைச் செலுத்த தவறினால் ஐந்து நாள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

