சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் நாட்டின் கடல்துறையின் செழிப்பிற்கும் அயராது பணியாற்றிய நினைவுகளை எஸ்ஜி 60 கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார் திரு மார்ட்டின் தாமஸ், 71.
முன்னாள் துறைமுக ஊழியரான திரு மார்ட்டின், இன்று சிங்கப்பூரின் 60வது தேசிய தினத்தையொட்டி, காலச்சுழற்சியில் மங்கிய கடந்த காலத்தை மீண்டும் நினைவுகூர்ந்தார்.
திரு மார்ட்டினின் குடும்பத்தில் இவர் ஒருவர் மட்டுமே கடல்துறையில் பணியாற்றினார். கடற்பயணத்தில் ஆர்வமிக்க அவரை 1971ல் இருகை நீட்டி வரவேற்றது சிங்கப்பூர்க் கடற்படை.
அப்போது, சிங்கப்பூர்க் கடற்படையானது கடல்துறைத் தளபத்தியம் என்று அழைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார் திரு மார்ட்டின்.
கடற்படையில் தமது அளப்பரிய சேவைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இவர் இழுவைப்படகுக் கட்டுப்பாட்டாளராகத் தகுதி பெற்றார்.
இழுவைப்படகுக் கட்டுப்பாட்டாளர்களை ஆங்கிலத்தில் ‘டக் மாஸ்டர்ஸ்’ என்று அழைப்பர். உலகின் மிகவும் பரபரப்பான, மிக முக்கியமான கடற்பரப்பாகத் திகழும் சிங்கப்பூருக்கு இழுவைப்படகு கட்டுப்பாட்டாளர்களின் பங்கு மிக முக்கியமானது.
சிங்கப்பூர்க் கடற்பரப்பில் எந்நேரத்திலும் 1,000க்கும் மேற்பட்ட கப்பல்களைக் காணலாம். பெரிய கொள்கலன் கப்பல்கள், எண்ணெய்க் கொள்கலன் கப்பல்கள், பயணக் கப்பல்களை வழிநடத்த திரு மார்ட்டினின் கைகள் தேவைப்பட்டன.
“என்னைப் போன்ற டக் மாஸ்டர் இல்லாவிட்டால் இந்தக் கப்பல்கள் பாதுகாப்பாக நிற்கவோ அல்லது புறப்படவோ முடியாது. குறிப்பாக, மோசமான வானிலையின்போது நான் இருந்தாக வேண்டும்,” என்றார் திரு மார்ட்டின்.
தொடர்புடைய செய்திகள்
இழுவைப்படகு அளவில் சிறியதாக இருந்தாலும் அது பெரிய கப்பல்களை இழுக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இழுவைப்படகுகளில் பலவகை உள்ளதாகக் குறிப்பிட்ட திரு மார்ட்டின், சிங்கப்பூருக்குள் நுழையும் எந்தக் கப்பலும் ஓர் இழுவைப்படகால் வழிகாட்டப்பட வேண்டும் என்றும் சொன்னார்.
திரு மார்ட்டினுக்கு மூன்று மகள்கள். இழுவைப்படகுக் கட்டுப்பாட்டாளராக பணிபுரிய தொடங்கியபோது அவர் தொலைவான கடற்பயணங்கள் மேற்கொள்ளவில்லை.
இழுவைப்படகுக் கட்டுப்பாட்டாளர்கள் துல்லியமான கட்டுப்பாட்டை உறுதிசெய்வதோடு கடல்சார் விபத்துகள், எண்ணெய்க் கசிவு அல்லது தாமதம் ஏற்படும் அபாயத்தைக் குறைத்தல் போன்றவற்றையும் கையாள்கின்றனர்.
கப்பல்களை நீர்ப்பரப்பிலிருந்து வெளியேற்றி, அவற்றில் இருக்கும் தண்ணீரை வடிகட்ட உலர்ந்ததோர் இடத்தில் வைத்து நீருக்கடியில் கப்பல் இருக்கும் பகுதிகளை ஆய்வு செய்யவும் திரு மார்ட்டின் போன்ற இழுவைப்படகுக் கட்டுப்பாட்டாளர்களின் உதவி தேவைப்படுகிறது.
அப்பணி அபாயம் நிறைந்தது எனக் குறிப்பிட்ட திரு மார்ட்டின், புலாவ் புக்கோம் தீவில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“24 மணி நேரம் அத்தீவில் வேலை பார்க்க வேண்டும். இரவில் சிறு வெளிச்சம்கூட இராது. மிதவைதான் எனக்குக் குறிகாட்டி,” என்றார் இவர்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூர்க் கடல்துறைக்குப் பங்காற்றியுள்ள திரு மார்ட்டின், இன்று கடல்துறை வெகுவாக மாறியுள்ளதாக சொன்னார். இழுவைப்படகுகளிலேயே பலவகை வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது சிங்கப்பூரின் வளர்ச்சிக்குச் சான்று பகர்வதாக நம்புகிறார்.
“சிங்கப்பூர்க் கடற்படையில் இப்போது நீர்மூழ்கிக் கப்பல்களும் அதிகம் உள்ளன. இரண்டு கடற்படைத் தளங்களும் பெரிய கொள்கலன் கப்பல்களும் இருப்பது நமது கடல்துறையின் வளர்ச்சியை நன்கு வெளிக்காட்டுகிறது,” என்று திரு மார்ட்டின் கூறினார்.

