புகைமூட்டப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வட்டார ஒத்துழைப்பு முக்கியம்: சுற்றுப்புற அமைப்பு

புகைமூட்டப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வட்டார ஒத்துழைப்பு முக்கியம்: சுற்றுப்புற அமைப்பு

தேசிய சுற்றுப்புற அமைப்பு நிலைமையைக் கண்காணித்துவருகிறது
படம்: ஏஎஃப்பி

12 Oct 2026 - 9:31 am

2 mins read

சிங்கப்பூரின் காற்றின் தரம் இவ்வாண்டு முதன்முறையாக, செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி ஆரோக்கியமற்ற நிலையைத் தொட்டது.

அதனையடுத்து காணப்பட்டுவரும் புகைமூட்டத்தின் அளவு, எல்லை தாண்டிய புகைமூட்டத் தூய்மைக்கேட்டுச் சட்டத்தைச் செயல்படுத்தும் நிலைக்குச் சில முறை சென்றதாக் கூறப்பட்டது. ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூர் கடுமையான புகைமூட்டப் பிரச்சினையை எதிர்நோக்குகிறது.

இந்தோனீசியாவில் காட்டுத்தீ

இந்தோனீசியாவில் புகைமூட்டத்தை விளைவிக்கும் காட்டுத்தீக்குக் காரணமாக இருக்கக்கூடிய நிறுவனங்கள்மீது சிங்கப்பூர் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த தேசிய சுற்றுப்புற அமைப்பின் பேச்சாளர், அமைப்பு புகைமூட்ட நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்துவருவதாகவும் காட்டுத்தீ எரியும் பகுதிகள் குறித்தும் அவற்றால் சிங்கப்பூர் காற்றுத்தரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பு பற்றியும் தகவல் சேகரித்துவருவதாக மட்டுமே தெரிவித்தார்.

எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வட்டார ஒத்துழைப்பு முக்கியம் என்று அவர் கூறினார்.

எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினை சட்டம், 2014ஆம் ஆண்டு வரையப்பட்டது. அதன்படி குற்றம் புரியும் தரப்புகளுக்கு நாளுக்கு 100,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படக்கூடும். மொத்த அபராதத் தொகை இரண்டு மில்லியன் வெள்ளியைத் தாண்டாது.

ஆரோக்கியமற்ற நிலையில் தொடரும் புகைமூட்டம்

சிங்கப்பூர் முழுவதும் திங்கட்கிழமை (அக்டோபர் 12) காலை நிலவரப்படி காற்றுத்தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது.

காலை 9 மணி நிலவரப்படி மேற்குப் பகுதியில், 24 மணிநேரத்துக்கான பிஎஸ்ஐ குறியீடு ஆக அதிகமாக 148ஆகப் பதிவானது.

மத்தியப் பகுதியில் 146ஆகவும் கிழக்கில் 133ஆகவும் வடக்கில் 104ஆகவும் தெற்கில் 117ஆகவும் பதிவானது. தேசிய சுற்றுப்புற அமைப்பின இணையத்தளத்தில் இவ்விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

24 மணிநேரத்துக்கான பிஎஸ்ஐ குறியீடு 101லிருந்து 200க்குள் இடைப்பட்டிருந்தால் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாக வகைப்படுத்தப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) மாலை தினந்தோறும் தான் அளிக்கும் அறிவுரையில் தேசிய சுற்றுப்புற அமைப்பு, 24 மணிநேரத்துக்கான பிஎஸ்ஐ குறியீடு தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தது.

“தென் சுமத்ரா, மேற்கு கலிமந்தானிலிருந்து வீசும் புகை சிங்கப்பூரை நோக்கித் தள்ளப்படுவது கண்டறியப்பட்டது,” என்று அமைப்பு குறிப்பிட்டது.

சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது. எனினும், தென் சுமத்ரா, கலிமந்தானில் உள்ள சில பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்புகைமூட்டம்பருவநிலைவானிலைகாற்றுத்தரம்