மேற்கு, மத்திய வட்டாரங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் நீடிப்பு

மேற்கு, மத்திய வட்டாரங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் நீடிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Oct 2026 - 9:34 am

2 mins read

சிங்கப்பூரின் காற்றுத் தரம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை மிதமான மற்றும் ஆரோக்கியமற்ற நிலைகளுக்கு இடையே நீடித்தது.

புதன்கிழமை (அக்டோபர் 21) காலை 7 மணிக்கு, 24 மணிநேர காற்று தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ) மேற்குப் பகுதியில் 133 ஆகவும் மத்தியப் பகுதியில் 116 ஆகவும் பதிவாகி ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருந்தது.

தீவின் பிற பகுதிகளில், அதாவது வடக்கு (82), தெற்கு (91) மற்றும் கிழக்கு (97) பகுதிகளில் காற்றுத் தரம் மிதமான நிலையில் இருந்தது.

இதற்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை பெரும்பாலான நேரங்களில் தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய ஆகிய நான்கு பகுதிகளில் 24 மணிநேர பிஎஸ்ஐ கணக்கீடு ஆரோக்கியமற்ற நிலையைக் காட்டியது.

தற்போதைய மூடுபனி காலத்தில், அக்டோபர் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆக அதிகமான 24 மணிநேர பிஎஸ்ஐ அளவீடு பதிவானது. அப்போது மேற்குப் பகுதியில் அது 230ஐ எட்டி, காற்றின் தரத்தை மிகவும் ஆரோக்கியமற்ற நிலைக்குக் கொண்டு சென்றது.

காலை 7 மணிக்கு ஒரு மணிநேர பிஎம்2.5 அளவீடுகள் 35 முதல் 81 வரை இருந்தன. இதில் மேற்குப் பகுதியில் 81ம் மத்தியப் பகுதியில் 59ம் என இந்த இரண்டு பகுதிகளிலும் பிஎம்2.5 அளவு அதிகமாகப் பதிவாகியிருந்தது.

ஒரு மணிநேர பிஎம்2.5 அளவீடுகள், ஒரு கன மீட்டருக்கான மைக்ரோகிராம் அலகுகளில் கணக்கிடப்படுகின்றன.

இவை நிகழ்நேரக் காற்றின் தரத்தை உணர்த்தும் அளவுகோலாகச் செயல்படுகின்றன.

ஆறு முக்கிய காற்றுத் தூய்மைக்கேட்டின் 24 மணிநேர சராசரி அளவைக் குறிக்கும் பிஎஸ்ஐ, 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் மிதமான நிலையிலும் 101 முதல் 200 வரை இருந்தால் ஆரோக்கியமற்ற நிலையிலும் இருப்பதாகக் கருதப்படுகிறது. 200க்கு மேல் செல்லும்போது ​​அது ஆக மோசமான நிலையைக் குறிக்கும்.

குறிப்புச் சொற்கள்