சிங்கப்பூரில் 14வது நாளாக ஆரோக்கியமற்ற நிலையில் காற்றுத்தரம்

சிங்கப்பூரில் 14வது நாளாக ஆரோக்கியமற்ற நிலையில் காற்றுத்தரம்

மேற்கில் ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலை
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Oct 2026 - 10:13 am

1 mins read

சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) காலை ஆரோக்கியமற்ற நிலையில் நீடித்தது. இருப்பினும், தீவின் மேற்குப் பகுதியில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ) 230ஐ எட்டியதால், அப்பகுதி மட்டும் ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலையில் பதிவானது.

ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணி நிலவரப்படி, பிஎஸ்ஐ வடக்கில் 128, தெற்கில் 171, கிழக்கில் 171, மத்தியப் பகுதியில் 185ஆக இருந்தது. மணிக்கு ஒருமுறை கணக்கிடப்படும் நுண்ணிய தூசு துகள்களின் அடர்த்தி (பிஎம்2.5) முற்பகல் 11.30 மணிக்கு அனைத்துப் பகுதிகளிலும் வழக்கம் போலவும் உயர்ந்தும் காணப்பட்டன.

2026ஆம் ஆண்டில் பதிவான ஆக அதிக பிஎம்2.5 அளவு, கடந்த புதன்கிழமை பிற்பகல் தீவின் மேற்குப் பகுதியில் 288ஆக பதிவானது.

சிங்கப்பூரில் அக்டோபர் 5 முதல் தொடர்ந்து 14வது நாளாகக் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்து வருகிறது. 2015ல் நிலவிய மோசமான புகைமூட்டத்துக்குப் பிறகு சிங்கப்பூர் எதிர்கொள்ளும் நீண்ட காற்றுத் தூய்மைக்கேட்டுப் பிரச்சினை இது.

தேசியச் சுற்றுப்புற அமைப்பு சனிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், பிஎஸ்ஐ 150 முதல் 220 வரை பதிவாகக்கூடும் எனக் கணித்தது. ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்றும் தென் அல்லது தென்கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று கலிமந்தானிலிருந்து வரும் புகையைக் குறைக்கக்கூடும் என்றும் அது தெரிவித்தது.

இருப்பினும், சுமத்ராவிலிருந்து புகை சற்று நகர்ந்து வரக்கூடும்; திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்