பாதுகாவல் தொழில்துறையைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஒரு நிறுவனம், சுமார் 300 ஊழியர்களைப் பதவி இறக்கம் செய்து அதன்மூலம் அவர்களின் சம்பளத்தைத் திருத்தி அமைக்க முயன்றது.
அந்த நிறுவனம், அந்த 300 பேரையும், அவர்கள் பார்த்து வந்த பதவியிலேயே தொடர்ந்து வைத்திருக்க வகைசெய்யும் ஒப்பந்தம் எதுவும் தன்னிடம் இல்லை என்ற நிலையில் அவர்களைப் பதவி இறக்கம் செய்தது.
இந்த விவரங்களைத் தொழிற்சங்க காங்கிரஸ் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் நேற்று தெரிவித்தார். என்றாலும் தவறிழைத்த நிறுவனத்தின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
தனியார் பாதுகாவல் தொழில்துறைக்கு உரிய படிப்படியாக முன்னேறும் சம்பள முறையின்கீழ், பாதுகாவல் அதிகாரிகளின் மாத அடிப்படைச் சம்பளம், மிகைநேரச் சம்பளம் சேராமல் 2016ல் $1,000 ஆக இருந்தது.
இது இப்போது $1,650 ஆக இருக்கிறது.
இந்தச் சம்பளம் 2024ஆம் ஆண்டு முதல் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றம் காணும். பாதுகாவல் துறை அதிகாரிகளாக வேலை பார்ப்பவர்கள் அடிப்படை சம்பளம், மிகைநேரச் சம்பளம் என்ற ஏற்பாட்டுக்குப் பதிலாக மாதாமாதம் மொத்த சம்பளத்தைப் பெறுவார்கள்.
காரணம் அவர்களுடைய சம்பளம் $2,600ஐத் தாண்டும். இப்படி நிகழும் பட்சத்தில் வேலை நியமனச் சட்டத்தின்படி, அவர்கள் மிகைநேரச் சம்பளத்திற்குத் தகுதி பெறமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நிறுவனம் ஊழியர்களைப் பதவி இறக்கம் செய்து அதன்மூலம் சம்பளத்தைத் திருத்த முயன்றதாக 2022 பிற்பகுதியில் தொழிற்சங்க உறுப்பினர்கள் மூலம் தெரியவந்தது.
உடனடியாக பாதுகாவல் ஊழியர்கள் சங்கம் அந்த நிறுவனத்துடன் தொடர்புகொண்டது.
அதனையடுத்து பதவி இறக்கத்தைக் கைவிட அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது.
பதிலாக, வேலை நேரத்தை அது கூட்டியது. அதன்மூலம் அந்த ஊழியர்களின் வேலை
நியமன நிபந்தனைகளைத் திருத்தி அமைக்க மற்றொரு முயற்சியை அந்த நிறுவனம் மேற்கொண்டது.
இதனையடுத்து இந்த விவகாரத்தை மனிதவள அமைச்சிடம் கொண்டு சென்று சமரசம் காண சங்கம் முயன்றது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுடன் தொடர்புகொண்டு நிவாரண நட வடிக்கைகளை மேற்கொள்ளும்படி தொழிற்சங்கமும் அமைச்சும் விடுத்த வேண்டுகோளை நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக திரு இங் தெரிவித்தார்.
மேல் விவரங்கள் தெரியவில்லை. இந்த விவகாரத்தைத் தேசிய தொழிற்சங்க காங்கிரசும் பாதுகாவல் ஊழியர் சங்கமும் அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றன.
அந்த நிறுவனம் மேற்கொண்டும் தவறிழைத்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த அமைப்புகள் தயங்காது என்று திரு இங் குறிப்பிட்டார்.

