சிங்கப்பூரின் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நீ சூன் குழுத்தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்று எதிர்க்கட்சியான மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது.
ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப்பின் மும்முனை போட்டியைத் தவிர்க்க அந்த முடிவை எடுத்ததாக மக்கள் சக்திக் கட்சி சொன்னது.
எனவே ஒன்றுபட்ட சிவப்புக் கட்சி ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நீ சூன் குழுத்தொகுதியில் ஆளும் மக்கள் செயல் கட்சியுடன் களமிறங்கவிருக்கிறது.
ஈஷூன் நகர மன்றத்தில் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியும் மக்கள் சக்திக் கட்சியும் இணைந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அந்த விவரங்கள் பகிரப்பட்டன.
தேர்தல் தொகுதி எல்லை குறித்த அறிக்கை வெளிவந்ததிலிருந்து எந்தக் கட்சி நீ சூனில் களமிறங்கவேண்டும் என்பதுபற்றி இரு எதிர்க்கட்சிகளும் கலந்துரையாடியதாகக் கூறின.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை பன்முனை போட்டியில் இறங்குவதில் எதிர்க்கட்சிகளுக்கு அதிகளவில் நாட்டமில்லை என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன.
2020ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி 2024ஆம் ஆண்டிலிருந்து நீ சூன் குழுத்தொகுதியை வலம் வருகிறது.
2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் நீ சூன் குழுத்தொகுதியில் மக்கள் முன்னேற்றக் கட்சியும் மக்கள் செயல் கட்சியும் களமிறங்கின.