நீ சூனில் உத்தேச வேட்பாளர்களை அறிமுகம் செய்த ஒன்றுப்பட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி

2 mins read
eee66d41-0c1b-44ce-839b-cc8c183d7979
(இடமிருந்து) தனியார் பள்ளி ஆசிரியர் டாக்டர் செய்யது அல்வி அகமது, மூத்த தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் திருவாட்டி ‌ஷெடன் லின், தொழில்நுட்ப வர்த்தக இயக்குநர் திரு பாங் ஹெங் சுவென். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக நீ சூன் குழுத்தொகுதியில் மூன்று உத்தேச வேட்பாளர்களை அறிமுகம் (ஏப்ரல் 13) செய்துள்ளது.

தனியார் பள்ளி ஆசிரியரும் கட்சியின் கொள்கை, மலாய்ப் பிரிவின் தலைவருமான 57 வயது டாக்டர் செய்யது அல்வி அகமது, தொழில்நுட்ப வர்த்தக இயக்குநரான 56 வயது திரு பாங் பெங் சுவான், தகவல் தொழில்நுட்பத் துறையின் மூத்த ஆலோசகரான 40 வயது திருவாட்டி ‌‌ஷெரன் லின் ஆகியோர் கட்சியால் அறிமுகம் செய்யப்பட்டனர்.

அவர்கள் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நீ சூன் குழுத்தொகுதியில் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் அணியை வழிநடத்துவர்.

ஈ‌சூன் அவென்யூ 5 புளோக் 101Cயில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சித் தலைமைச் செயலாளர் ரவி பிலமன், நீ சூன் குழுத்தொகுதியையும் மக்களையும் முன்னேற்றிவிட அவர்களுடன் இணைந்து செயல்பட உறுதியுடன் இருப்பதாகக் கூறினார்.

நீ சூன் வட்டாரத்தில் தூய்மைப் பிரச்சினை, எலித் தொல்லை, உணவுக் கடைகளுக்கான அதிக வாடகை ஆகியவை குறித்து குடியிருப்பாளர்கள் முறையிட்டதாக திரு பிலமன் குறிப்பிட்டார்.

திரு செய்யது அல்வி நீ சூன் குடியிருப்பாளர்களைக் குறிப்பாக மலாய், முஸ்லிம் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்குக் கைகொடுப்பார் என்றும் வெற்றிகரமான வர்த்தகத் தலைவரான திரு பாங், புத்தாக்கத்தையும் வேலைப் பாதுகாப்பையும் முன்னிறுத்தும் கொள்கைகளுக்குக் குரல் கொடுப்பார் என்றும் அவர் கூறினார்.

ஈசூனில் வளர்ந்து தற்போது அங்கு வசித்துவரும் திருவாட்டி லின், இணையப் பாதுகாப்பிலும் மின்னிலக்கக் கட்டமைப்புகளிலும் ஆழமான திறன் கொண்டவர் என்று திரு பிலமன் சொன்னார்.

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி எதிர்வரும் தேர்தலில் நீ சூன் குழுத்தொகுதி உட்பட ஏழு தொகுதிகளில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்