தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவின் வெளிநாட்டு மாணவர் விசா நிலவரம்; சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகங்கள் கண்காணிப்பு

2 mins read
6f2cece7-2d0e-49aa-ad16-317288e044c2
விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகங்களை மேலும் விரிவாக பரிசோதிப்பதற்கு வெளியுறவு அமைச்சு தயார் செய்யும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளிவந்தது. - படம்: புளூம்பர்க்

சிங்கப்பூரின் தன்னாட்சி பல்கலைக்கழகங்கள் அமெரிக்காவின் குடிநுழைவுக் கொள்கையை அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றன. குறிப்பாக, புதிய மாணவர்களுக்கும் மாணவர் பரிமாற்றத் திட்டங்களுக்குமான தற்காலிக விசா அனுமதி ரத்து, அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மாணவர்களைப் பாதிக்கக்கூடும்.

மாணவர்களுக்கும் வெளிநாட்டு வருகையாளர்களுக்குமான விசா முன்பதிவுகளை ரத்து செய்யும்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சு மே 27ஆம் தேதியன்று உலகெங்குமுள்ள தனது எல்லாத் தூதரங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

விசா முன்பதிவுகளுக்கு ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டவர்கள் தொடரலாம், ஆனால் முன்பதிவுகளுக்கு உறுதி செய்யப்படாதவர்களுக்கு அந்த நேரம் தரப்படக்கூடாது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சின் உத்தரவு குறிப்பிடுகிறது.

விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகங்களை மேலும் விரிவாக பரிசோதிப்பதற்கு வெளியுறவு அமைச்சு தயார் செய்யும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளிவந்தது.

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவில் சிறிது காலம் படிப்பதற்குத் தயாராகி வருகின்றனர்.

அமெரிக்காவில் மாணவர் பரிமாற்றத் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள அல்லது செல்லவிருக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் அறிவுறுத்தி ஆதரவு நல்கி வருவதாக சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகம் தெரிவித்தது.

மற்ற நாடுகளுக்கான பரிமாற்றத் திட்டங்களுக்கு மாணவர்களை மாற்றுவது, அல்லது வேறொரு தவணைக்காலத்திற்கு அவர்களது திட்டங்களை மாற்றுவது ஆகியவை இதில் அடங்கும்.

புதிய நிலவரத்தால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை வெளியிட சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகம் மறுத்தபோதும் இது மாறிவரும் நிலவரம் என்றும் மாற்றங்களைத் தாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் தேசிய பல்கலைக்கழகம் கூறியது.

குறிப்புச் சொற்கள்