இஸ்தானா பொது வரவேற்பிற்கு 22,000 வருகையாளர்கள்

இஸ்தானா பொது வரவேற்பிற்கு 22,000 வருகையாளர்கள்

2 mins read
8207e149-9d2d-4ad8-946c-a6c605b00f8d
தேசிய தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சியின் விளையாட்டு ஒன்றில் கலந்துகொண்ட மக்கள். - படம்: எஸ்பிஎச் மீடியா
multi-img1 of 2

இஸ்தானா (அதிபர் மாளிகை) பொது வரவேற்பில் முதல்முறையாக, திறந்தவெளி இசைக்கச்சேரி ஒன்று நடைபெற்றது.

சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நடைபெற்ற இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.  காலை, மாலை என இரண்டு வேளையிலும் நடைபெற்ற இவ்வாண்டின் நிகழ்ச்சிக்குக் கிட்டத்தட்ட 22,000 மக்கள் திரண்டிருந்தனர்.

இஸ்தானா வளாகம் முழுவதும் சிவப்பும் வெள்ளையுமாக உடையணிந்த பொதுமக்களின் வருகையினாலும் அடையாளச் சின்ன (mascot) பொம்மைகளின் சுறுசுறுப்பினாலும்  சிங்கப்பூரின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வண்ணமயமான கலைக்கூடமாகவே காட்சியளித்தது. 

அதிபர் தர்மன் சண்முகரத்னம் அவரது மனைவி ஜேன் இத்தோகியுடன் இரு வேளைகளிலும் வருகை தந்து, பொதுமக்களைச் சந்தித்து உரையாடியதுடன் கூடாரங்களில் மேடையேற்றப்பட்ட கலைநிகழ்ச்சிகளையும் பார்வையிட்டு மகிழ்ந்தார். காலையில் மழை பெய்தபோதிலும், திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றி உட்புறக் கூடாரங்களில் சீராகத் தொடர்ந்தன.

நாட்டுப் பற்றை விதைத்த சாவடிகளும் சிறப்பு நடவடிக்கைகளும் 

சிங்கப்பூர் தனது 61வது தேசிய தினத்தைக் கொண்டாட ஆயத்தமாகி வரும் வேளையில், நாட்டின் தேசிய உறுதிமொழி உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இதனை அடையாளம் கண்டு, சிங்கப்பூரின் நல்லிணக்கத்தை மேலும் வலுவாக்கும் நோக்கில் கலாசார, சமூக இளையர்துறை அமைச்சு மின்னிலக்க உறுதிமொழிச் சுவர் (digital pledge wall) அரங்கை அமைத்திருந்தது.

“சிங்கப்பூரராக இருப்பதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதைப் பற்றிச் சிங்கப்பூரர்கள் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதே இந்த உறுதிமொழிச் சுவரின் நோக்கம்,” என்று கலாசார, சமூக இளையர்துறை அமைச்சின் ‘நல்லிணக்க வட்டங்கள்’ (Harmony Circles) அலுவலகத்தின் மேலாளர் ஷங்கரி ராசேந்திரன், 31, தெரிவித்தார்.

எல்லாத் தரப்பு மக்களையும் ஈடுபடுத்திய வகையில் ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பின் பொக்கியா (Boccia) விளையாட்டும் ‘ஆக்டிவ் ஹெல்த்’ உடற்பயிற்சிச் சவால்களும் நடத்தப்பட்டன.

அதோடு சிறுவர் அருங்காட்சியகம், தேசிய மரபுடைமைக் கழகத்தின் சிறுவர்களுக்கான சிங்கப்பூர் வரலாறு கதைப் புத்தகத்தை விற்ற சாவடி, சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் இஸ்தானா வளாகம் இணைந்து நடத்திய முத்திரைச் சேகரிப்புப் போட்டி ஆகியவற்றுடன் களிமண் கைவினைப் பயிலரங்குகளும் பலூன் உருவக்கலைச் சாவடியும் அமைக்கப்பட்டிருந்தன.

கலைநிகழ்ச்சிகளால் களைகட்டிய அதிபர் மாளிகை

நிகழ்ச்சியின் வெளிப்புறக் கலைநிகழ்ச்சிகளைப் பொதுமக்கள் புல்வெளிகளில் விரித்த பாய்களில் அமர்ந்து கண்டு ரசித்தனர்.

உள்ளூர்ப் பாடகர்கள் ஷாஸா, ஆம்ஸ்டன் ஹுவாங் போன்றோருடன் நியூ ஓபரா சிங்கப்பூர் போன்றவை படைத்த நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்தேசிய தினம்அதிபர் தர்மன்கலைவிழா