செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் நேர்ந்த சம்பவம் குறித்து மிகவும் கவலையுற்றிருப்பதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் உள்துறை மூத்த துணையமைச்சருமான இணைப் பேராசிரியர் டாக்டர் ஃபைஷால் இப்ராஹிம் கூறியுள்ளார்.
தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய பொருள் அபாயமற்றது என்பது நிம்மதியளித்தாலும் அத்தகைய சம்பவங்களை அப்படியே விட்டுவிட முடியாது என்றார் டாக்டர் ஃபைஷால்.
சிங்கப்பூரில் உள்ள நமது வழிபாட்டுத் தலங்கள் தேவாலயங்களாக இருந்தாலும், பள்ளிவாசல்களாக இருந்தாலும், ஆலயங்களாக இருந்தாலும் எப்போதும் பாதுகாப்பான இடங்களாக இருப்பது அவசியம் என்ற இணைப் பேராசிரியர் ஃபைஷால், அத்தகைய இடங்களில் நேரும் அச்சுறுத்தல்கள் மக்களின் நம்பிக்கையையும் சமூகத்தில் உள்ள பிணைப்பையும் சீர்குலைப்பதாகக் கூறினார்.
சிங்கப்பூர் பல இன, பல சமய மக்கள் நிறைந்த நாடு. இருதரப்பு மரியாதை, புரிந்துணர்வு, எந்தச் சமயத்தையும் அச்சமின்றிப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் ஆகியவை நமது அடிப்படைக் கொள்கைகள். பதற்றத்தையும் விரிசலையும் விதைக்க முயலும் எந்தச் செயலையும் நாம் புறக்கணிக்கவேண்டும் என்று இணைப் பேராசிரியர் ஃபைஷால் அறிவுறுத்தினார்.
“இத்தகைய வேளையில் கிறிஸ்தவ நண்பர்களுடன் மலாய், முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக நிற்கவேண்டும். பல மாதங்களுக்குமுன் அல் இஸ்திகாமா பள்ளிவாசல் சம்பவத்தின்போது பிற சமயத்தினர் நம்முடன் துணை நின்றதுபோல நாமும் துணை நிற்கவேண்டும்,” என்று அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
அல் இஸ்திகாமா பள்ளிவாசலிலும் இதற்குமுன் இதுபோன்ற அச்சுறுத்தல் நேர்ந்தது நாம் இன்னும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது என்று முயிஸ் எனும் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் சொன்னது.
இத்தகைய அச்சுறுத்தல்கள் அச்சத்தையும் பிரிவினைகளையும் விதைக்க நாம் அனுமதிக்கக்கூடாது என்று கூறிய முயிஸ், சிங்கப்பூரின் சமய அமைப்புகள் ஒற்றுமையாக இருந்து அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் வலுப்படுத்திவருவதாகச் சொன்னது.
இப்படிப்பட்ட சூழலில் வழிபாட்டுத் தலங்களில் அமைதி, ஒற்றுமை, நம்பிக்கை ஆகியவற்றை வலுப்படுத்துவது அவசியம் என்று முயிஸ் வலியுறுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
வடமேற்கு வட்டார மேயர் திரு அலெக்ஸ் யாம், செயிண்ட் ஜோசஃப் தேவாலயம் இத்தகைய சூழலை எதிர்கொள்வது இது முதல் முறையன்று என்றார். ஒவ்வொரு முறையும் தேவாலயமும் அதன் மக்களும் இன்னும் வலுவானவர்களாக, ஒற்றுமையுள்ளவர்களாக மீண்டுவந்துள்ளனர் என்று திரு யாம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் அதேவேளையில், அதிகாரிகள் கூறுவதையும் கவனமாகப் பின்பற்றவேண்டும் என்று கூறிய அவர், இத்தகைய அச்சுறுத்தலால் பயந்துவிடவேண்டாம் என்றார்.

