ஒற்றுமையே நம் பலம்: சான் சுன் சிங்

ஒற்றுமையே நம் பலம்: சான் சுன் சிங்

1 mins read
53aa4056-01de-4e7c-94d7-0b746233bf69
ஹாலந்து டிரைவ்வில் உள்ள சந்தையிலும் உணவங்காடி நிலையத்திலும் குடியிருப்பாளர்களைச் சந்தித்து நன்றி கூறினார் அமைச்சர் சான் சுன் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுத் தேர்தலுக்குப் பிறகு உண்மையான போட்டி சிங்கபூரர்களுக்கு இடையில் அல்ல உலகத்துடன்தான் என்று கல்வியமைச்சர் சான் சுன் சிங் ஞாயிற்றுக்கிழமை (மே 4) கூறியுள்ளார். திரு சானின் மக்கள் செயல் கட்சி அணி தஞ்சோங் பாகார் குழுத்தொகுதியில் மாபெரும் வெற்றிப் பெற்றது.

ஹாலந்து வில்லே‌ஜ் சந்தை, உணவங்காடி நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு சான், மக்களின் உறுதியான ஆதரவு கொண்ட சிறந்த அணியை சிங்கப்பூர் களமிறக்க வேண்டும் என்றார்.

“நாம் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் உலகத்துடன் புதிய உடன்பாடுகளைச் செய்யவும் சிங்கப்பூரர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர், அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுகின்றனர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்,” என்று திரு சான் குறிப்பிட்டார்.

எந்தத் தேர்தலாக இருந்தாலும் தொடரும் வர்த்தகப் போர், அனைத்துலக சவால்கள், நிச்சயமற்ற சூழல் ஆகிய அடிப்படை விவகாரங்களில்தான் கவனம் இருக்க வேண்டும் என்ற திரு சான், சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவது, தொடர்ந்து உயரும் சம்பளம் ஆகியவை அவற்றுள் அடங்கும் என்றார்.

“சிங்கப்பூரர்கள் இனம், சமயம் சார்ந்த அடையாள அரசியலைப் புறக்கணித்திருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சி. நாம் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாம் சக சிங்கப்பூரர்கள்,” என்று திரு சான் வலியுறுத்தினார்.

திரு சான் உள்ளிட்ட மக்கள் செயல் கட்சி அணி தஞ்சோங் பாகார் குழுத்தொகுதியில் சாதனை அளவாக 81.03% வாக்குகளைப் பெற்று சீர்திருத்த மக்கள் கூட்டணியை வென்றது.

குறிப்புச் சொற்கள்