சிங்கப்பூர் யுனிவர்சல் ஸ்டூடியோசில் உள்ள ‘என்சாண்டட் ஏர்வேஸ்’ ரோலர் கோஸ்டர் , வியாழக்கிழமை (ஜூலை 16) பிற்பகல் 1 மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தண்டவாளத்தின் நடுவழியில் திடீரென நின்றது.
இதனால் அதில் இருந்த 15 பேர் 45 டிகிரி சாய்வான பாதையில் நடுவானில் தவித்தனர். இதைக் காட்டும் காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த ஊழியர்கள், ரோலர் கோஸ்டரில் சிக்கியிருந்த 15 பேரையும் உடனடியாகப் பத்திரமாக வெளியேற்றினர்.
அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா செய்தித் தொடர்பாளர், சம்பவம் நிகழ்ந்தபோது ரோலர் கோஸ்டரில் இருந்தோருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்புக் கோரியதுடன், முழுமையான பாதுகாப்புப் பரிசோதனைகளுக்குப் பிறகு ரோலர் கோஸ்டர் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அதே நாளன்று யூனிவர்சல் ஸ்டூடியோசில் மற்ற இயந்திரங்களுக்கும் கோளாறு ஏற்பட்டதாக இணையவாசிகள் சிலர் தெரிவித்தனர். பாதிப்படைந்தோருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்தனர்.

