பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகளுக்கு அதிக நன்கொடை

1 mins read
202b5857-b2cb-4d85-8db6-d7e98e480fdf
யுஓபி வங்கியிலிருந்து நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் 110 மில்லியன் வெள்ளி நன்கொடையை உறுதிசெய்யும் கையொப்ப நிகழ்ச்சி.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஆகப் பெரும் நன்கொடைத் தொகைகள், இங்குள்ள பல்கலைக்கழங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் தரப்படுவது வழமையாக உள்ளது.

யுஓபி வங்கியிலிருந்தும் வீ அறக்கட்டளையிடமிருந்தும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (என்டியு) 110 மில்லியன் வெள்ளியைப் பெற்றதாகக் கடந்த மாதம் தகவல் வெளிவந்தது.

பல்கலைக்கழகத்தின் மூன்று திட்டங்களை இந்த நன்கொடை ஆதரிக்கும். அந்தத் திட்டங்களில் ஒன்றான என்டியு வாய்ப்பு மானியத்தின்வழி (Opportunity Grant) நிதியுதவி தேவைப்படும் மாணவர்களுக்குப் பல்கலை விடுதியில் தங்குவதற்கும் 10,000 வெள்ளி வரையிலான தொகையை வழங்குகிறது.

இது, அந்தப் பல்கலைக்கழகம் பெற்றுள்ள இரண்டாவது ஆகப்பெரிய தொகையாகும். 2011ல் லீ அறக்கட்டளை, லீ கோங் சியன் மருத்துவப் பள்ளியைத் தொடங்க என்டியுவிற்கு 150 மில்லியன் வெள்ளி நிதி தந்தது.

அதுபோல், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திற்கும் நன்கொடையாகப் பெருந்தொகை கிடைத்தது.

கடந்த 2023ஆம் ஆண்டில் அந்தப் பல்கலைக்கழகத்தின் லீ குவான் யூ கொள்கை ஆய்வுப் பள்ளிக்கு லோ டக் குவோங் அறக்கட்டளை 101 மில்லியன் வெள்ளியை வழங்கியது. அத்தொகை ஆசியாவைச் சேர்ந்த பொது அதிகாரிகளுக்கு ஆதரவு அளிப்பதுடன், ஆசிய வட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளங்களை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது.

நிலக்கரி வணிகர் லோ டக் குவோங்கின் பெயர் சூட்டப்பட்ட இந்த அறக்கட்டளை, கடந்த மூன்று ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைகளில் ஒன்றாகும்.

குறிப்புச் சொற்கள்