சிங்கப்பூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் வளாக நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் ஆடவர் ஒருவர் கழிவறையின் உட்கூரையில் கேமரா ஒன்றைப் பொருத்தினார்
அது உடற்குறையுள்ளோருக்கான கழிவறை என்று தெரிவிக்கப்பட்டது.
மற்றவர்கள் கழிவறையைப் பயன்படுத்தும்போது அவர்களுக்குத் தெரியாமல் அவர்களைக் காணொளி எடுக்க அந்த 26 வயது ஆடவர் அவ்வாறு செய்தார்.
தமது மனைவி கர்ப்பமாக இருந்ததால் கேமராவில் பதிவாகும் காணொளிகளைப் பார்த்து தமது பாலியல் இச்சைகளைப் பூர்த்தி செய்ய அந்த ஆடவர் கேமராவைப் பொருத்தினார்.
ஆனால் ஒரே ஒருவர் மட்டுமே கேமராவில் பதிவானார். அது அந்த ஆடவருடைய ஆண் சக ஊழியர்.
மற்றவர்களுக்குத் தெரியாமல் அவர்களைக் காணொளி எடுத்து பார்வை மூலம் பாலியல் இன்புறுதல் குற்றத்தின் பேரில் மலேசியரான அந்த ஆடவருக்கு ஏழு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
புதன்கிழமை (பிப்ரவரி 19) தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தைக் காக்க குற்றம் புரிந்தவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வாண்டு ஜனவரி 16ஆம் தேதி கழிவறையின் உட்கூரையில் அந்த ஆடவர் கேமராவைப் பொருத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
அதே நாளன்று கழிவறையைப் பயன்படுத்திய ஆண் சக ஊழியரின் கண்களுக்கு உட்கூரையில் பொருத்தப்பட்டிருந்த கேமரா தட்டுப்பட்டது.
அதுகுறித்து அவர் பல்கலைக்கழகத்திடம் புகார் அளித்தார். அந்தக் கழிவறையை யாரும் பயன்படுத்த முடியாதபடி தடுப்பு போட்டப்பட்டது.
அதையடுத்து, பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில ஊழியர்கள் விசாரணை நடத்தினர்.
ஜனவரி 20ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. மூன்று நாள்கள் கழித்து கேமரா பொருத்திய ஆடவர் கைது செய்யப்பட்டார்.