சிங்கப்பூரில் அனுமதியின்றி பொது இடங்களில் கூடுவது, ஊர்வலங்களில் பங்கேற்பது ஆகியவற்றை நடத்தியதாக 31 முதல் 70 வயதுக்குட்பட்ட அறுவர் மீது திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 28) குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
அவர்களில் நான்கு பேர் ஏற்கெனவே இதுபோன்ற குற்றங்களுக்காக விசாரணை செய்யப்பட்டு, எச்சரிக்கை அல்லது அபராதம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாங்கிச் சிறைச்சாலைக்கு வெளியே 2024, 2025ஆம் ஆண்டுகளில் அனுமதியின்றி கூடியதற்காக 31 வயது ஆடவர், 56 வயது பெண் ஆகிய இருவர் மீது பொது ஒழுங்குச் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.
இதில் அந்த 31 வயது ஆடவர் மீது அனுமதியின்றி பொது இடங்களில் கூடியதற்காக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன. இவர் 2022ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் செய்த இதுபோன்ற குற்றங்களுக்காகவும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காகவும் ஏற்கெனவே கடுமையான எச்சரிக்கையைப் பெற்றவர் ஆவார்.
அதேபோல, குற்றம் சுமத்தப்பட இருக்கும் 56 வயது பெண் மீது 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22, 29 ஆகிய தேதிகளில் அனுமதியின்றி பொது இடங்களில் கூடியதற்காக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.
இவர் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி அரசு நீதிமன்றத்துக்கு வெளியே கூடியதற்காக 2026ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் அன்று கடுமையான எச்சரிக்கையைப் பெற்றிருந்தார்.
மேலும், 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி அரசு நீதிமன்றத்துக்கு வெளியே தடைசெய்யப்பட்ட பகுதியில் கூடியதற்காக அந்த 31 வயது ஆடவர் உட்பட ஐந்து பேர் மீது தலா ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது. இதில் 37 வயது பெண் ஒருவரும் அடங்குவார். இவர் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்துறை அமைச்சின் முன் பொது ஊர்வலத்தில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
பொது இடங்களில் கூடும் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வோருக்கு அல்லது அவற்றில் பங்கேற்போருக்கு $10,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
