சிங்கப்பூருக்குள் வரிசெலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற 32 வயது மலேசியர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
மலேசியாவில் பதிவான மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு அந்த நபர் மலேசியாவிலிருந்து உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாகச் சிங்கப்பூருக்குள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
வரிசெலுத்தப்படாத சிகரெட்டுகள் தொடர்பாகத் தகவல் கிடைத்ததை அடுத்து அந்த மோட்டார் சைக்கிள் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் அதன் ஃபேஸ்புக்கில் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 2) பதிவிட்டது.
மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் உள்ள பகுதியிலிருந்து வரிசெலுத்தப்படாத 400க்கும் மேற்பட்ட பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டு அகற்றப்பட்டன.
இந்த வழக்கு, விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.

