குழந்தையின் முதல் இரு ஆண்டுகளில் ஒவ்வோரு பெற்றோருக்கான சம்பளமில்லா குழந்தைப் பராமரிப்பு விடுப்பு ஆண்டுக்கு 12 நாள்களாக அதிகரிக்கப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
முதலாளிகளுக்கு குறைந்தது மூன்று மாதங்கள் வேலை செய்திருந்தால், இந்தச் சம்பளமில்லா விடுப்புக்கு சிங்கப்பூர் பிள்ளைகளின் பெற்றோர் அனைவரும் தகுதிபெறலாம் என்றார் திரு வோங்.
2024 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இது நடப்புக்கு வரும். இரண்டு வயதுக்குக்கீழ் உள்ள சிங்கப்பூர் குழந்தைகளின் தகுதிபெறும் வேலை செய்யும் பெற்றோருக்கு இது பொருந்தும்.
மகப்பேறு விடுப்பு, தந்தையர் விடுப்பு, குழந்தைப் பராமரிப்பு விடுப்பு, சம்பளமில்லா குழந்தைப் பராமரிப்பு விடுப்பு என அனைத்தையும் சேர்த்தால், குழந்தையின் முதல் வயதில் வேலை செய்வோருக்கான பெற்றோர் விடுப்பு 22 வாரங்களிலிருந்து 26 வாரங்கள் வரை உயரும்.

