தவறுகளைத் தட்டிக் கேட்கும் மாணவர்களுக்கு ‘அறியப்படாத நாயகர்’ விருது

தவறுகளைத் தட்டிக் கேட்கும் மாணவர்களுக்கு ‘அறியப்படாத நாயகர்’ விருது

2 mins read
95c3fdaa-e6f1-491c-b5ea-e7ece1bf453e
தாவ் நான் பள்ளி மாணவி டெபி ஓங் உட்பட 194 மாணவர்களுக்கு அறியப்படாத நாயகர் விருது வழங்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பள்ளிகளில் நிகழும் கேலிவதைச் சம்பவங்களுக்கு மாணவர்களின் பரிவே சிறந்த மருந்து என்று கல்வித் துணையமைச்சர் ஜாஸ்மின் லாவ் கூறியுள்ளார்.

“சம்பவங்களை நாங்கள் கையாள வேண்டியிருந்தது. அதற்காகச் சிலரைத் தண்டித்துத் திருத்த வேண்டும். ஆனால், அது நெடுநாள் தீர்வாகாது. மாணவர்களில் அதிகமானோர் துன்புறுத்தலுக்கு எதிராகக் குரல் கொடுப்பது நீண்டகாலம் நீடிக்கக்கூடிய ஒரே தீர்வாகும்,” என்று திருவாட்டி லாவ் கூறினார்.

‘அறியப்படாத நாயகர்கள்’ மாணவர் விருது நிகழ்ச்சியில் உரையாற்றியபோது திருவாட்டி லாவ் அதனைக் குறிப்பிட்டார். ஸ்பிரிங் சிங்கப்பூர் உள்ளரங்கில் சனிக்கிழமை (மே 23) நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் 81 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 194 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பரிவு, துணிச்சல், சேவை ஆகியவற்றுக்காக அந்த விருது, தொடக்கப் பள்ளி முதல் தொடக்கக் கல்லூரி வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

விருது பெற்ற மாணவர்களில் சிலர், மற்றவர்களை வார்த்தைகளால் புண்படுத்தும் அல்லது அடித்துத் துன்புறுத்தும் மாணவர்களைத் தட்டிக் கேட்டவர்களாக உள்ளனர். இதனைப் பாராட்டிய துணையமைச்சர் திருவாட்டி லாவ், எந்த வயதைத் தாண்டினாலும் தொடர்ந்து பரிவுமிக்கவர்களாகத் திகழும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

“நீங்கள் பரிவு காட்ட முடியாமல் இருப்பதற்கான சூழல் வருங்காலத்தில் அதிகம் ஏற்படலாம். கூடுதலாக வேலை செய்யும் உங்களைப் பற்றியே நினைப்பதிலும் படிப்பில் போட்டியிடுவதிலும் நீங்கள் அழுத்தத்தை எதிர்நோக்கலாம். இதனால், உங்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“ஆனால், நீங்கள் விருதைப் பெறும்போது, எதற்காக அதைப் பெறுகிறீர்கள் என்பதைப் பற்றி வாய்ப்பு கிடைக்கும்போது யோசித்துப் பாருங்கள். உங்களை ‘அறியப்படாத நாயகர்’ என ஒருவர் சொல்லும்போது உங்களுக்கு எப்படி இருந்தது என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் பெரியவர்களாக வளர்ந்தபிறகும் அதனை மறவாதீர்கள்,” என்று திருவாட்டி லாவ் கூறினார்.

மாணவர்களுடன் சேர்த்து ஆசிரியர்களையும் பெற்றோரையும் திருவாட்டி லாவ் பாராட்டினார். “பரிவு காட்டுவது, குரலை உயர்த்தாமல் இருப்பது என நீங்கள் வீட்டில் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு முடிவையும் உங்கள் பிள்ளைகள் கவனிப்பர்,” என்றார் அவர்.

விருதுபெற்ற மாணவர்களைப் பாராட்டிய சிங்கப்பூரின் ‘அறியப்படாத நாயகர்’ இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான எம் பி செல்வம், சமூகத்தின் வருங்காலத் தொடர்ச்சியை இந்த மாணவர்கள் உறுதிசெய்வதாகக் கூறினார்.

“வன்முறை நிறைந்த உலகில் பரிவு என்பது மிகத் தேவை. வருங்காலத்தைக் காப்பதற்கான ஒரு கட்டமைப்பாக அது உள்ளது,” என்றார் திரு செல்வம்.

முதியோரையோ சிறப்புத் தேவையுடையோரையோ சக மாணவர்களையோ ஆதரித்து நல்லது செய்யும் மாணவர்களைப் போற்றும் நோக்கில், இந்த வருடாந்தர விருதுகள் 2023ல் தொடங்கப்பட்டன.

விருது பெற்றவர்களில் ஒருவரான 12 வயது மாணவி டெபி ஓங், பாலர் பள்ளியில் இருந்தபோது எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்றாலும், பிறருக்கு உதவி செய்வதிலிருந்து அவர் பின்வாங்கவில்லை.

சிங்கப்பூர் உடற்குறையுள்ளோர் விளையாட்டு மன்றத்தில் இளம் மேசைப்பந்து விளையாட்டாளர்களில் ஒருவரான டெபி, தாம் செய்யும் உதவியால் பிறர் ஊக்கமடைவதை எண்ணி மகிழ்வதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்