குடியிருப்புப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள நீலநிற மறுசுழற்சித் தொட்டிகளில் என்னென்ன பொருள்களைப் போடலாம் என்பது குறித்து அறிந்துகொள்ள விரும்புவோருக்குக் கைகொடுக்க இருக்கிறது ‘புளூபின்’ ஏஐ பேசுசெயலி (Bloobin AI chatbot).
தேசிய சுற்றுப்புற வாரியம் உருவாக்கியுள்ள இந்தப் பேசுசெயலி, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இயங்கும்.
இந்தப் பேசுசெயலி திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 16) வாட்ஸ்அப், டெலிகிராம் சமூக ஊடகத் தளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனிடம் ஒரு பொருளை மறுசுழற்சி செய்யலாமா என்று கேள்வியாகவும் கேட்கலாம், அல்லது படமெடுத்தும் அனுப்பலாம்.
யூனிட்டி தொடக்கப் பள்ளியில் ‘ரீசைக்கிள் ரைட் 2024’ இயக்கத்தைத் தொடங்கி வைத்தபோது, இந்த புளூபின் பேசுசெயலியையும் அறிமுகம் செய்தார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங்.
கடந்த 2021ஆம் ஆண்டு 64 விழுக்காட்டுக் குடும்பங்கள் மறுசுழற்சி செய்த நிலையில், அவ்விகிதம் 2023ஆம் ஆண்டில் 72 விழுக்காடாக உயர்ந்தது தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ஆய்வின்மூலம் தெரியவந்தது.
ஆயினும், நீலநிறத் தொட்டிகளில் போடப்படும் மறுசுழற்சிப் பொருள்கள் வீணாகி, பயன்படுத்த முடியாமல் போடுவதும் கிட்டத்தட்ட 40 விழுக்காடாக நீடிக்கிறது. அதற்கு, எதனைப் போடலாம், எதனைப் போடக்கூடாது என்பது தெரியாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
காகிதம், நெகிழி, கண்ணாடி, உலோகப் பொருள்களுக்கான நீலநிறத் தொட்டிகளில் உணவு, பானம் போன்றவற்றை வீசும்போது, அவை மறுசுழற்சி செய்யத் தகுந்த பொருள்களையும் வீணாக்கி விடுகின்றன. அதன்பின் அவற்றை எரியாலையில்தான் எரித்தாக வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
சிறிய மின்னணுக் கருவிகள் (41%), பழைய துணிகள் (41%), மின்விளக்குகள் (31%) ஆகியவையே அதிகமாக தவறாக வகைப்படுத்தப்பட்ட பொருள்கள்.
வாணலி, நல்ல நிலையிலுள்ள ஆடைகள் போன்றவற்றை மறுசுழற்சித் தொட்டியில் போடக்கூடாது. நெகிழிக் கலன்களை நன்றாகக் கழுவி, உலர்த்திய பின்னரே மறுசுழற்சித் தொட்டியில் இடவேண்டும்.
வரும் 2030ஆம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்த மறுசுழற்சி விகிதத்தை 70 விழுக்காடாக உயர்த்த சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.

