உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாடகை கார் ஒன்றின் சக்கரங்களில் சோதனையிட்ட அதிகாரிகள், அதில் தீர்வைச் செலுத்தப்படாதச் சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.
கடந்த ஜூலை 16ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் வாகனங்களைத் தீவிரச் சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாடகைக் கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்தது.
அந்தக் காரின் பின்பக்கச் சக்கரம் ஒன்றில் பழுது பார்க்கப்பட்ட அடையாளம் இருந்ததை அதிகாரிகள் கவனித்தனர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் காரை விரிவான பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, காரின் நான்கு சக்கரங்களையும் வாகனத்தில் இருந்த கூடுதல் சக்கரத்தையும் அதிகாரிகள் கத்தியால் அறுத்துப் பார்த்தனர்.
அப்போது சக்கரங்களின் உட்பகுதியில் மஞ்சள் நிறப் பொட்டலங்களில் சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கார் சக்கரங்களுக்குள் இருந்து மொத்தம் 1,200க்கும் மேற்பட்ட தீர்வைச் செலுத்தப்படாத சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பவம் தொடர்பாக 47 வயது சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளும் பிடிபட்ட சந்தேகப் பேர்வழியும் மேல் விசாரணைக்காகச் சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வரி செலுத்தப்படாத பொருள்களை வாங்குவது, விற்பது, கடத்துவது அல்லது உடைமையில் வைத்திருப்பது கடுமையான குற்றங்களாகும்.
இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வரி ஏய்பு செய்தத் தொகையைப் போல 40 மடங்கு வரை அபராதமோ, ஆறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

