யுஓபி (UOB) வங்கியின் நிகர லாபம் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் ஆண்டு அடிப்படையில் ஆறு விழுக்காடு குறைந்தது.
குறைந்துவரும் வட்டி விகிதங்களால் வட்டியின் மூலம் கிடைக்கும் நிகர வருவாய் குறைந்ததே அதற்கு முக்கியக் காரணம் என்று வங்கி சொன்னது.
ஜூன் 30ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கான நிகர லாபம் $1.34 பில்லியன். ஒப்புநோக்க ஓராண்டுக்கு முன்னர் அது $1.43 பில்லியனாக இருந்தது. புளூம்பெர்க் கருத்துக்கணிப்பில் யுஓபியின் லாபம் $1.48 பில்லியனாக இருக்கும் என்று நிபுணர்கள் முன்னுரைத்திருந்தனர். அதைக் காட்டிலும் அண்மை நிகர லாபம் குறைவு.
முந்திய காலாண்டிலும் இதே நிலைதான். வல்லுநர்கள் எதிர்பார்த்ததைவிட நிகர லாபம் குறைவாக இருந்தது. முதல் காலாண்டில் வங்கி $1.49 பில்லியன் லாபம் ஈட்டியது. இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் அதைக் காட்டிலும் 10 விழுக்காடு குறைவு.
ஆண்டின் முற்பாதிக்கு யுஓபி, ஒவ்வொரு பங்கிற்கும் 85 காசு ஈவுத்தொகை தருவதாகக் கூறியுள்ளது. ஓராண்டுக்கு முன்னர் வங்கி 88 காசு கொடுத்திருந்தது. இம்முறை பங்குதாரர்களுக்குச் சிறப்பு ஈவுத்தொகையாக ஒவ்வொரு பங்கிற்கும் 50 காசு வழங்கப்படும் என்றும் வங்கி பிப்ரவரியில் தெரிவித்திருந்தது.