‘யுஓபி ஹார்ட்பீட் ஓட்டம் 2026’, இவ்வாண்டு வசதிகுறைந்த 20,500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆதரவளிப்பதற்காக ஏறக்குறைய S$1.4 மில்லியனைத் திரட்டியுள்ளது.
அந்த நிதி, சமூக உண்டியல் மூலம் செலுத்தப்பட்டு கல்வி, வழிகாட்டுதல், சமூக ஆதரவு, சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் தொடர்பான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
சிங்கப்பூரில் ஷைன் குழந்தைகள், இளையர் சேவைகள், கிட்ஸ்டார்ட், பாத்லைட் பள்ளி, ஹார்ட்வேர் நெட்வொர்க், சவுத் சென்ட்ரல் சமூகக் குடும்ப சேவை நிலையம் ஆகியவை அதிபர் சவால் திட்டத்தின்கீழ் பயன்பெறும் அமைப்புகளாகும்.
“இந்த அமைப்புகள் குழந்தைகள், இளையர்களின் வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் அவர்களுக்கு ஆதரவளிப்பதுடன் கல்வி, குடும்ப ஆதரவு முதல் இளையோர் மேம்பாடு வரை அவர்களின் பல்வேறு தேவைகளையும் நிவர்த்தி செய்கின்றன,” என்று யுஓபி வங்கியின் நிறுவனச் சமூகப் பொறுப்புணர்வுப் பிரிவின் தலைவர் லெனர்ட் டான் கூறினார்.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) ‘த புரோமோண்டரி @ மரினா பே’ பகுதியில் நடைபெற்ற அந்த வருடாந்தர நிகழ்வுக்கு, கிட்டத்தட்ட 8,000 யுஓபி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பங்காளிகள், பயனாளிகள் உள்ளிட்டோர் ஒன்றுதிரண்டனர்.
சிங்கப்பூரைத் தவிர, ‘யுஓபி ஹார்ட்பீட் ஓட்டம்’ வரவிருக்கும் மாதங்களில் சீனா, ஹாங்காங், இந்தோனீசியா போன்ற வங்கியின் முக்கிய வட்டாரச் சந்தைகளிலும் நடத்தப்படவுள்ளது. அதன் மூலம் திரட்டப்படும் நிதி, உலகம் முழுவதும் உள்ள 28 அறநிறுவனங்களுக்குப் பயனளிக்கும்.


