அடுத்த ஓராண்டிற்குள் 1,000 இளம்பட்டதாரிகளைப் பணியமர்த்த யுஓபி வங்கி திட்டமிட்டுள்ளது.
தனிநபர் நிதிச் சேவைகள், பணமோசடி தடுப்புப் பிரிவுகள், நிர்வாக இணைப்பு, பயிற்சித் திட்டங்கள் மூலம் அடுத்த அக்டோபர் மாதத்திற்குள் 1,000 இளம்பட்டதாரிகள் சிங்கப்பூரில் பணியமர்த்தப்படுவர்.
“செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பல அன்றாடப் பணிகளைச் செய்யக்கூடியதாக இருந்தாலும், வங்கி தொடர்ந்து புதியவர்களைப் பணியமர்த்தும். இளையர்கள் அனுபவம் பெறவும் தொழில்முறையில் வளரவும் வாய்ப்புகள் அவசியம்,” என்று வியாழக்கிழமை (அக்டோபர் 8) நடைபெற்ற வங்கியின் எட்டாவது ஆண்டு ‘பெட்டர் யு விழா 2026’ நிகழ்வில் உரையாற்றிய யுஓபி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி வீ ஈ சோங் இதனைத் தெரிவித்தார்.
ஓய்வுபெறும் வயதை நெருங்குவோர், நீக்குப்போக்கான பணியை விரும்புவோருக்கான ‘கிக்+யு’ திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர் சேவை, விற்பனைப் பணிகள் புதிதாகச் சேர்க்கப்படுகின்றன.
2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் அறிமுகமாகும் அத்திட்டத்தில் 200 பேர்வரை சேர்க்கப்படுவர். சான்றிதழ் தேவைப்படும் குறிப்பிட்ட பணியாளர்களுக்கு மாதம் S$500 வரை தக்கவைப்புத்தொகையும் காப்புறுதி வசதியும் வழங்கப்படும்.
தொழில்நுட்பம் மாறினாலும் தலைமைத்துவப் பண்பு மனிதர்களுக்கே உரியது எனக் கூறிய திரு வீ, 2027 இறுதிக்குள் வங்கியின் 5,500 மேலாளர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சி அளிப்பதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில்முறை உரையாடல்களைப் பயிற்சி செய்ய அத்திட்டம் உதவும்.
