யுஓபி வங்கி தன்னிடம் ஏறத்தாழ $74.6 மில்லியன் கேட்டுள்ளதாக கெத்தே சினிபிளெக்சின் உரிமையாளரான எம்எம்2 ஆசியா குழுமம் தெரிவித்துள்ளது.
இது யுஓபி வங்கியிடம் எம்எம்2 ஆசியாகுழுமமும் அதற்குச் சொந்தமான பல பிரிவுகளும் திருப்பித் தர வேண்டிய தொகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்எம்2 ஆசியா குழுமத்தின் கெத்தே சினிபிளெக்ஸ் வர்த்தகம் நொடித்துப்போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அக்குழுமத்திடமிருந்து யுஓபி வங்கி கேட்கும் தொகை அதன் மதிப்பைவிட ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகம்.
எம்எம்2 ஆசியா குழுமத்தின் மதிப்பு $26 மில்லியன்.
கெத்தே சினிபிளெக்ஸ் அதன் செயல்பாடுகளைச் செப்டம்பர் மாதத்துடன் நிறுத்திக்கொண்டது.
யுஓபி தொடர்பான இவ்விவகாரம் குறித்து சட்ட ஆலோசனை நாடியிருப்பதாகவும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்க இருப்பதாகவும் எம்எம்2 ஆசியா குழுமம் கூறியது.

